புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > 2000 வெள்ளி சம்பளம் தருகிறோம்! வேலைக்கு ஆள் இருக்கிறதா? மலேசிய சிகை அலங்கார அங்கத்தினர் அதிருப்தி
சமூகம்முதன்மைச் செய்திகள்

2000 வெள்ளி சம்பளம் தருகிறோம்! வேலைக்கு ஆள் இருக்கிறதா? மலேசிய சிகை அலங்கார அங்கத்தினர் அதிருப்தி

கோலாலம்பூர் மே 14

அன்னிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையில் மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பாளர்கள் நிலைய உரிமையாளர்கள் மிகப்பெரிய பாதிப்பை எதிர் கொண்டிருப்பதாக அதன் செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

ஆள் பற்றாக்குறை காரணமாக அன்னிய தொழிலாளர்களை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை தற்போது எழுந்துள்ளது. ஆனால் இதுவரையில் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படாததால் பலர் தங்களது கடைகளை மூடி விட்டார்கள் என அவர் தெரிவித்தார்.

மலேசிய சிகையலங்கார தொழிலைப் பொறுத்தவரை 30 விழுக்காட்டினர் இத் தொழிலை விட்டு விட்டார்கள் என அவர் குற்றம் சாட்டினார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல் அன்னிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு நாங்கள் இதுவரையில் போராடி வருகின்றோம். ஆனால் எங்களுக்கு அதற்கான உரிமம் வழங்கப்படாத காரணத்திற்காக பலர் இத்தொழிலில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து வருகின்றார்கள்.

அரசாங்கமும் 1100 வெள்ளியை அடிப்படை ஊதியமாக  வழங்க வேண்டுமென்ற கூறுகின்றது. ஆனால் நாங்கள் 2000 வெள்ளி வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம். ஆனால் மனிதவள அமைச்சு மனிதவளத்தை எங்களுக்கு தர முடியுமா என்ற கேள்வியையும் சங்கத்தினர் முன்வைத்துள்ளனர்.

அன்னிய தொழிலாளர்களைத் தருவிப்பது தொடர்பில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து நாடு முழுமையும் தொடர்ந்து விவாதங்கள் நடந்தது. அதில் கலந்துகொண்டு எங்களது மன ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி அன்னிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதன் அவசியத்தையும் நாங்கள் எடுத்துரைத்தோம்.

ஆனால் இதுவரையில் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் இருப்பது எங்களுக்கு மன சங்கடத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் அயூப் கான் அன்னிய தொழிலாளர்கள் பிரச்சினைக்கு அமைச்சு கூடிய விரைவில் நல்ல முடிவை கூறாவிட்டால் அமைதி போராட்டம் செய்வோம் என கூறி இருக்கின்றார். அதற்கு நாங்கள் முழு மனதாக இணக்கம் தெரிவிப்பதாகவும் சங்கத்தின் தலைவர் மகேந்திரன் கூறினார்.

மலேசியாவில் பாரம்பரியத் தொழிலை செய்து வரும் அனைவரும் ஒரே குடையின் கீழ் இணைந்திருக்கின்றோம். எங்களின் அனைவருக்கும் ஆள் பற்றாக்குறை பிரச்சனை எழுந்துள்ளது. இதுகுறித்து பலரிடம் நாங்கள் பேச்சு நடத்தி விட்ட பிறகும் இன்றளவும் எந்த தீர்வும் இல்லை. புத்ராஜெயாவில் ஒன்று கூடி எங்களுடைய குறைகளை எடுத்துக் கூறினால் தான் அது அரசாங்கத்திற்கு போய் சேரும் என்றால் அதையும் நிச்சயம் செய்வோம் என அவர் திட்டவட்டமாக கூறினார். 4 இந்திய அமைச்சர்கள் இருந்தும் எங்களின் பிரச்னைக்கு தீர்வுதான் இல்லை என அவர்கள் குறிப்பிட்டனர்,

முடிதிருத்துவோர் சங்கத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி அனைத்து இந்திய முதலாளிகளும் அன்னிய தொழிலாளர்களைத் தருவிப்பதில் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். நாட்டின் அடிப்படை உரிமம் இன்றி பல அந்நிய தொழிலாளர்கள் முதலாளிகள் போல் தொழில் செய்து வருகின்றார்கள். முறையான உரிமத்தை அவர்கள் கொண்டிருக்காமல் தொழில் செய்ய அவர்களுக்கு இங்கு வாய்ப்பு வழங்கப் படுகின்றது. ஆனால் நாங்கள் முறையாக விண்ணப்பம் செய்து தொழிலாளர்களை கேட்டாலும் அரசு ஆள் பலத்தை எங்களுக்கு வழங்காததற்கு என்ன காரணம் என்ற கேள்வியையும் அவர்கள் முன்வைத்தனர்.

சிகை அலங்கார தொழில் செய்பவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மேலவைத் தலைவர் டத்தோ மோகனிடம் கூறினோம். அவர் மலேசிய இந்திய காங்கிரசின் முன்னாள் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியத்திடம் இப் பிரச்சினையை எடுத்துச் சென்று, 30,000 அன்னிய தொழிலாளர்களைக் கொண்டு வருவதற்கு இணக்கம் தெரிவித்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அனைத்தும் மாறிவிட்டது.

இதற்கு முன்னர் துன் மகாதீர் பிரதமராக இருந்தபோது கூட அன்னிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு வாய்ப்பு வழங்கினார். அதோடு கடைகளை அமைப்பதற்கு கடன் உதவியும் வழங்கி பின்னர் அதை இலவச கடனுதவியாக அறிவித்தார். இப்போதும் எங்களுடைய பிரச்சனைகளை அறிந்து கொண்டு, அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும். இல்லையெனில் அமைதிப் போராட்டத்தை தவிர வேறு வழியில்லை என அவர்கள் சூளுரைத்தனர்.

மலேசிய சிகை அலங்கார சங்கத்தின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அதன் தலைவர் மகேந்திரன் துணைத்தலைவர் சுதந்திரன், செயலாளர் ராஜசேகரன் உட்பட சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன