கோலாலம்பூர், மே.15-

பி.கே.ஆர் கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இதற்கு முன் சிறை கைதியாக இருந்திருப்பதால், அவர் பிரதமர் பொறுப்புக்கு தகுதியானவரா என பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ தக்கியூடின் ஹசான் எழுப்பியுள்ள கேள்வி, பொறுப்பற்ற ஒரு கூற்றாகும் என பி.கே.ஆர் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு அரச மனிப்பு  வழங்கப்பட்டுள்ளதால், தக்கியூடின் எழுப்பியிருக்கும் கேள்வியானது நியாயமற்றது என்றும் அஸ்மின் தெரிவித்தார். 1998 ஆம் ஆண்டில் அன்வார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் குற்றச்சாட்டுகள் என்பதை அனைவரும் அறிவோம். அதற்காக அவருக்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதையும் அஸ்மின் சுட்டி காட்டினார்.

அரசியல் ரீதியாக நாம் கருத்து வேறுபாடு கொண்டிருக்கலாம். ஆனால், நாட்டின் நன்மைக்காக இந்த விவகாரத்திற்கு சிறந்த தீர்வு காணப்பட்டுள்ள வேளையில் மீண்டும் அதனை கேள்வி எழுப்புவது முறையல்ல என்றும் அஸ்மின் தெரிவித்தார். கோலாலம்பூரில் ரிஸ்டா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அஸ்மின் இதனைத் தெரிவித்தார்.