அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > அன்னிய தொழிலாளர் விவகாரம்: அரசாங்கத்திற்கு ஒரு மாத காலக்கெடு!
சமூகம்முதன்மைச் செய்திகள்

அன்னிய தொழிலாளர் விவகாரம்: அரசாங்கத்திற்கு ஒரு மாத காலக்கெடு!

கோலாலம்பூர் மே 15-

    அன்னிய தொழிலாளர்களைத் வேலைக்கு அமர்த்துவதில் சிக்கல்களை எதிர்நோக்கி இருக்கும் இந்திய பாரம்பரிய வர்த்தகர்களின் பிரச்சனைக்கு அரசாங்கம் ஒரு மாதத்திற்கு ஒரு தீர்வு காண வேண்டும். இல்லையேல் பிரதமர் துன் டாக்டர் மகாதீர்  அலுவலகத்தின் முன்பு கருப்புக் கொடி காட்டப்படும் போராட்டம் முன்னெடுக்கப்படும்  என மலேசிய இந்திய பொற்கொல்லர் நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் டத்தோ அப்துல் ரசூல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

  தலைநகரில் மிகவும் பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றாக விளங்குவது லெபோ அம்பாங் சாலை. இங்கு பலர் பாரம்பரியமாக வர்த்தகத் துறையில் ஈடுபட்டு வருகின்றார்கள். கடந்த ஓராண்டாக அன்னிய தொழிலாளர்களை கொண்டு வருவதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதால் வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என அப்துல் ரசூல் தெரிவித்தார்.

   மிக முக்கியமான வர்த்தக தளமான இங்கு பல கடைகள் மூடப்பட்டு இருப்பதை கண்கூடாக காண முடிகின்றது. இது வர்த்தகம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  பொற்கொல்லர் உட்பட இதர முக்கிய துறைகள் பாரம்பரியமாகவே இந்தியர்கள் செய்துவரும் தொழில் ஆகும். குறிப்பாக நகை செய்பவர்களைப் பொறுத்தவரை அத்தொழிலின் நுணுக்கம் அறிந்தவர்கள் இந்தியாவை சார்ந்தவர்களாக தான் இருக்கிறார்கள். அவர்களை இங்கு கொண்டு வரமுடியாத சூழ்நிலை நிலவுவதால் பொற்கொல்லர்கள் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறார்கள்.

   மனிதவள அமைச்சர் குலசேகரனை 15 முறை சந்தித்து விட்டோம். ஆனால் அன்னிய தொழிலாளர் பிரச்சினைக்கு இன்றளவும் தீர்வு காணப்படவில்லை. இந்நிலை தொடர்ந்தால் பொற்கொல்லர் மட்டுமல்ல அனைத்து வர்த்தக துறைகளும் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும் என அப்துல் ரசூல் எச்சரித்தார். இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் ஒரே நபராக பிரதமரை தான் நாங்கள் கருதுகிறோம்.

  இன்னும் ஒரு மாதத்திற்குள் எங்களது பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். இல்லையென்றால் இந்த விவகாரத்திற்கு ஆட்சேபம் தெரிவித்து பிரதமர் அலுவலகத்தின் முன்பு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அப்துல் ரசூல் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன