மேலவை உறுப்பினராக இளைஞர் பிரதிநிதி நியமிக்கப்படுவார்! –  டாக்டர் மகாதீர் தகவல்

கோலாலம்பூர் மே.16-

இளைஞர் மேம்பாட்டு விவகாரத்தில் பரவலான அனுபவம் மற்றும் நிபுணத்துவம் பெற்ற இளைஞர் ஒருவரை மேலவை உறுப்பினராக நியமிப்பதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்தார்.

கூடிய விரைவில் இளைஞர் பிரதிநிதி மேலவை உறுப்பினராக நியமிக்கப்படுவார் என்ற பரிந்துரையையும் அவர் தெரிவித்தார்.

தகுதி பெற்ற இளைஞர்கள் பல்வேறு முன்னணி பதவிகளில் தொடர்ந்து நியமிக்கப்படுவார்கள். இதன்வழி முடிவுகள் எடுப்பதில் இளைஞர் சமுதாயத்தின் குரல் மேலும் அதிகரிக்க முடியும் என்றும் டாக்டர் மகாதீர் கூறினார். விசுவாசமும் நம்பிக்கையும் உள்ள இளைஞர்கள் புதிய அரசாங்கத்தில் பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

மாவட்டம் மாநிலம், தேசியம் மற்றும் அனைத்துலக ரீதியிலும் அனைத்து நிலைகளிலும் அரசாங்கத்தின் ஒவ்வொரு முடிவுகளிலும் இளைஞர் ஃசமுதாயத்தின் குரல்கள் ஒலிப்பதைனஃ இப்போதைய அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

அரசாங்கத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு ஊக்குவிப்புடன் இளைஞர் சமூகத்தை மேம்படுத்துவதற்கு முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் சொன்னார். மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் இளைஞர் சக்தி என்ற தலைப்பில் 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் தினத்தை தொடங்கி வைத்து பேசிய போது டாக்டர் மகாதீர் இத்தகவலை வெளியிட்டார்.

இந்த நிகழ்வில் இளைஞர் ஆற்றல் மன்றத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார். இளைஞர் இயக்கங்களில் இளைய தலைமுறையினரின் ஈடுபாட்டை அதிகரிப்பதோடு அவர்கள் சமூக பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் யூத் பவர் கிளப் என்ற அமைப்பு செயல்படும் என்றும் அவர் கூறினார்.

இவ்வாண்டும் அடுத்த ஆண்டும் இளைஞர் சக்தி திட்டத்தை அமல்படுத்துவதற்கு 5 கோடி வெள்ளிக்கும் மேல் தேவைப்படுவதாகவும் டாக்டர் மகாதீர் கூறினார்.