கோலாலம்பூர் மே 17-

மலேசியாவிலும் இந்தோனேசியாவிலும் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த ஐ.எஸ் தீவிரவாதிகளின் மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் படைத் தலைவர் அப்துல் ஹமிட் படோர் இதனைத் தெரிவித்தார்.

இந்த மூன்று சந்தேகப் பேர்வழிகளில் இருவர் மலேசிய பிரஜைகள். மற்றொருவர் இந்தோனேசியாவை சேர்ந்தவராவார். இவர்கள் அனைவரும் மே 11ஆம் தேதி கெடா மற்றும் சிலாங்கூரில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வந்ததோடு அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் நம்பப்படுகிறது. மலேசியாவிலும் இந்தோனேசியாவிலும் இவர்கள் தாக்குதல் நடத்துவதற்கும் திட்டமிட்டிருந்ததாக போலீஸ் படை தலைவர் அப்துல் ஹமிட் படோர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திரங்கானு மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் மே 5 மற்றும் 7ஆம் தேதிகளில் 2 ரோஹின்யா நபர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாதம் 13ஆம் தேதி போலீசாரால் தேடப்படுவதாக அறிவிக்கப்பட்ட இருவர் தங்களது குடும்பத்தின் ஒத்துழைப்போடு சரணடைந்தனர். இவர்களின் ஒருவர் பெர்கர் விற்பனையாளராகவும் மற்றொரு நபர் தோட்டக்காரராகவும் வேலை செய்து வருவதாக அப்துல் ஹமிட் தெரிவித்தார்.

அந்த இரண்டு நபர்களும் இதற்குமுன் இந்தோனேசியாவில் வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியும் பெற்றிருந்தனர். மற்றொரு நபர் மலேசியாவில் இஸ்லாமியர் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்துவதற்கும் திட்டமிட்டிருந்ததாகவும் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.