அளவுக்கு மீறிய உப்பு பிரயோகத்தால் அதிகமானோருக்கு உயர் இரத்த அழுத்தம்! பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வருத்தம்!

பினாங்கு மே 17-

அன்றாட தேவைக்கும் மேலாகவே உணவுகளில் உப்பு பயன்பாட்டை மிகைப்படுத்திக் கொள்ளும் பழக்கம் மலேசியர்கள் மத்தியில் நீடித்து வருவதால், அதிகமானோருக்கு உயர் இரத்த அழுத்தம் கண்டு வருவது தொடர்பில், பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வருத்தம் தெரிவித்திருக்கிறது.

சராசரியாக ஒருவருக்கு 5 கிராம் உப்பு போதுமானதாக இருக்கின்ற நிலையில், இதன் பயன்பாடு மலேசியர்கள் மத்தியில் சுமார் 8.7 கிராம் வரையில் அதிகமாகவே உட்கொள்ளப்படுவதால், தற்போது 18 வயதிற்கும் மேற்பட்ட ஏறத்தாழ 32.7% சதவிகிதம் பேருக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கின்ற உண்மை புலப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு தெளிவுப்படுத்தியிருக்கிறது.

உயர் இரத்த அழுத்தம் பல்வேறான உபாதைகளுக்கு மூல காரணமாக அமைவதை உத்தேசித்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் உன்னத நோக்கத்தின் பேரில் உலகளாவிய நிலையில் ஒவ்வொரு வருடமும் மே 17ஆம் தேதி உலக உயர் இரத்த அழுத்த தினம் அனுசரிக்கப்படுவதையும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் சுட்டிக் காட்டியிருக்கிறது.

உயர் இரத்த அழுத்தம் பக்கவாதம்,சிறுநீரக செயலிழப்பு, அகால மரணம் போன்ற பாதகங்களுக்கு முக்கிய மூல காரணமென்றும், இதனை உணர்ந்து அன்றாட வாழ்க்கை முறையில் உப்பு பயன்பாட்டை மலேசியர்கள்குறைத்துக் கொள்வது மிகவும் அவசியமானதென்று, பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் துணைத் தலைவர் மொகிதீன் அப்துல் காதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெரியவர்களில் மூவரில் ஒருவர் உயர் இரத்த அழுத்த நோயாளியாக இருப்பதாகவும் ஐந்து பெரியவர்களில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது அறியப்படாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கும் அவர்,உணவு கலாசார முறையில் மாற்றம் காணப்படவில்லை என்றால் இந்நிலை மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமற்ற உணவு பழக்கம்,புகைப் பிடித்தல், மது அருந்துதல் மற்றும் போதிய உடலுழைப்பின்மை ஆகிய காரணங்களும் உயர் இரத்த அழுத்தத்தோடு தொடர்பு கொண்டிருப்பதாக உணர்த்தியிருக்கும் மொகிதீன், நீரிழிவு நோயும், உடல் பருமனும் உயர் இரத்த அழுத்தத்தோடு தொடர்பு கொண்டிருப்பதை குறிப்பிட்டுள்ளார்.

மலேசியர்கள் உண்னுகின்ற உணவு வகைகளில் அதிக அளவில் உப்பு சேர்க்கப்படுகின்ற உண்மை பல்வேறு ஆய்வுகள் வாயிலாக கண்டறியப்பட்டிருப்பதை எடுத்துரைத்திருக்கும் அவர், இந்த பயன்பட்டை குறைத்துக் கொள்ளுமாறு பற்பன வழிகளில் அறிவுரைகளும் ஆலோசனைகளும் சுகாதார அமைச்சு மற்றும் உடல் ஆரோக்கிய அமைப்புகளால் வலியுறுத்தப்பட்டு வருவதையும் நினைவு கூர்ந்துள்ளார்.

சோடியம் எனப்படும் தூள் உப்பு நீரைப் பிடித்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டிருப்பதால், இது இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதாகவும், தயார் நிலையான உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், அங்காடி உணவுகள், கரிக்கும் வகையான நொறுக்கு தீனிகள் முதலியவற்றில் இத்தகைய உப்பு அதிக அளவில் சேர்க்கப்படுவதாகவும் புலப்படுத்தியுள்ளார்.

இவற்றை தவிர்த்து கருவாடு, உப்பு முட்டை,உப்பிட்ட காய்கறிகள், கரிக்கும் சாஸ் வ்வகைகள், சுவையூட்டிகள் போன்றவற்றிலும் உப்பு மிகுந்திருப்பதை உணர வேண்டுமென்று அறிவுறுத்தியிருக்கும் அவர், உணவு தயாரிப்பாளர்கள் தங்கள் உணவு தயாரிப்புகளில் சேர்க்கப்படுகின்ற உப்பின் அளவை லேபலில் குறிப்பிட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

எப்போதுமே எல்லா வகையான உணவுகளிலும் உப்பின் பயன்பாடு குறைவாக இருப்பதை மலேசியர்கள் உறுதிப்படுத்திக் கொண்டு, இதனை நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடித்து வந்தால் உயர் இரத்த அழுத்த நோயை தவிர்க்க இயலுமென்றும், உணவு வகைகளை கொள்முதல் செய்யும்போது, குறைவான உப்பு சேர்க்கப்பட்டவற்றையே தேர்வு செய்வது நன்மை பயக்குமென்றும் மொகிதீன் கேட்டுக் கொண்டுள்ளார்.