பிடிபிடிஎன்: பயண தடை விதிப்பதற்கு முன்பு கால அவகாசம் வழங்குவீர்!

பாங்கி, மே 17-

கல்வி கடனைத் திரும்பச் செலுத்தத் தவறியவர்களுக்கு எதிராக  வெளிநாடு செல்ல தடை விதிப்பதற்கு முன்பு தேசிய உயர் கல்வி கழகம் (பிடிபிடிஎன்) அவர்களுக்குப் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சிலருக்கு இன்னும் வேலை கிடைக்காத சூழலில்  கடனைத் திருப்பிச் செலுத்தும் விவகாரத்தில்  சில தளர்வுகளை ஏற்படுத்தலாம் என்று பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஆலோசனை கூறினார்.

“இவர்கள் மீது எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் இவர்களுக்குச் சிரமத்தைத் தரக்கூடாது என்ற பொது மக்களின் கருத்தை  நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று கல்வி  கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களுக்கு எதிராக பிடிபிடிஎன் மீண்டும் பயண தடையை விதிக்கத் திட்டமிட்டிருப்பது குறித்து கருத்துரைக்கக் கேட்டபோது அன்வார் இதனைத் தெரிவித்தார்.

“மக்களின் விருப்பத்தை நான் ஆதரிக்கிறேன். கடனைத் திரும்பச் செலுத்தத் தவறியவர்கள் குறிப்பாக இன்னும் வேலை கிடைக்காதவர்களுக்கு எதிராக  எந்தவொரு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை மக்கள் நிச்சயம் விரும்பமாட்டார்கள்” என்று இங்கு அரசு சார்பற்ற முஸ்லிம் இயக்கங்களுடன்  நோன்பு துறந்த நிகழ்ச்சிக்குப்  பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

“அவர்கள் கடன் பெற்றது உண்மேயே. ஆனால், அவர்களுக்கு இன்னும் வேலை கிடைக்காத  சூழலில்   மேலும் சுமையை ஏன் கொடுக்க வேண்டும்” என்று வினவினார் போர்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார். கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியவர்களுக்கு எதிராக  பிடிபிடிஎன் மீண்டும் பயண தடையை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருவதாகத் தெரிகிறது.