ஜார்ஜ் டவுன், மே 17-

தேசிய  உயர் கல்வி கழகத்தின்  (பிடிபிடிஎன்) கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியவர்களுக்கு  வெளிநாடு செல்வதற்கு மீண்டும் தடை விதிப்பது பொது மக்கள் முன் வைத்த பரிந்துரைகளில் ஒன்றாகும் எனக் கூறப்பட்டது.

விரைவில் அமல்படுத்தும்படி பிடிபிடிஎன் இந்த பரிந்துரையை முன் வைக்கவில்லை  என்று கல்வியமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக் தெரிவித்தார்.

“பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரையையே  பிடிபிடிஎன் முன் வைத்தது. சில விவகாரங்களில் இவர்கள் பொது மக்களின் கருத்துகளை அறிய விரும்புகின்றனர்” என்றார் மஸ்லி.

” கல்வி கடனைத் திரும்பச் செலுத்தத் தவறியவர்களுக்கு எதிராக  வெளிநாடு செல்ல மீண்டும் தடை விதிப்பது பிடிபிடிஎன்னின் பரிந்துரை கிடையாது. இவ்விவகாரம் குறித்து அக்கழகத்தின் தலைவர் வான் சைஃபுல் வான் ஜானிடம்  செய்தியாளர்கள் வினவியபோது அவர் இப்படி பதில் அளித்துள்ளார்” என்றார் அமைச்சர்.

“இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் நிலவாமல் இருப்பதைத் தடுக்க பிடிபிடிஎன் செய்தியாளர் கூட்டத்தில் விளக்கமளிக்க வேண்டும்” என்று இங்குள்ள சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளிக்கு வருகை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

பிடிபிடிஎன் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது வெளிநாடு செல்ல மீண்டும் தடை விதிக்கப்படலாம் என்று ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன.