அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர்  எஸ்.எம். முகமட் இட்ரிஸ் காலமானார்!
சமூகம்முதன்மைச் செய்திகள்

பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர்  எஸ்.எம். முகமட் இட்ரிஸ் காலமானார்!

ஜோர்ஜ்டவுன் மே 17-

பயனீட்டாளர்கள் மத்தியில் நல்லதொரு அடையாளமாக விளங்கிய பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர் எஸ்.எம்.. முகமட் இட்ரிஸ் காலமானார். 93 வயதான அவர் பினாங்கு கெளினிக்கல் மருத்துவமனையில் இன்று மாலை மணி 4.45 அளவில் காலமானார். முகமட் இட்ரிஸின் இருதயம் செயல் இழந்ததால் அவர் இறந்தார்.

இருதயக் கோளாறு காரணமாக அவர் இன்று அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். முகமட் இட்ரிஸ் தலைமைத்துவத்தின் கீழ் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் நாட்டில் பயனீட்டாளர்களிடையே சிறந்த வாழ்க்கை முறையையும் ஆரோக்கியத்தையும் கொண்டுவருவதற்கான விழிப்புணர்வை பல ஆண்டுகாலமாக ஏற்படுத்தி வந்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தை முகமட் இட்ரிஸ் தோற்றுவித்தார். அப்போது முதல் பயனீட்டாளர் மற்றும் சுற்றுச்சூழல் விவகாரத்தில் அரசாங்கத்திற்கு நெருக்குதல் தரும் தரப்பின் முக்கிய நபராக அவர் விளங்கி வந்தார்.

அவரது முயற்சியின் காரணமாகவே 1975 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் துறை உருவாக்கப்பட்டது. பல ஆண்டுகாலம் முகமட் இட்ரிஸ் தொடர்ச்சியாக நடத்திய பெரும் போராட்டத்தின் காரணமாக நச்சு மருந்துகள் தடை செய்யப்பட்டன. இது தவிர அனைத்து உணவு தயாரிப்பு பொருட்களிலும் காலாவதியாகும் தேதி களும் பிரசுரிக்கப்பட்டன.

இது தவிர சிகரெட் விளம்பரங்களுக்கும் தடை செய்யப்பட்டது. சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு கூடுதல் நன்மைகள் கிடைப்பதற்கான சலுகைகளும் கிடைப்பதற்கான வாய்ப்பும் ஏற்பட்டது. ஊழியர் சேம நிதி வாரியம் தனது சந்தாதாரர்களுக்கு வீடுகள் வாங்குவதற்கான கூடுதல் அனுகூலங்கள் கிடைப்பதற்கும் சட்ட பாதுகாப்புக்கும் முகமட் இட்ரிஸ் முக்கிய பங்காற்றி உள்ளார் என்பதை மறந்துவிட முடியாது.

நாட்டில் பயனீட்டாளர்களின் நலன்களுக்காக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிய எளிய தலைவராகவும் முகமட் இட்ரிஸ் விளங்கினார். சுற்றுச்சூழல் விவகாரத்திலும் அவர் தொடர்ந்து போராடியுள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் பயனீட்டாளர் விழிப்புணர்வை பள்ளிகளில் அறிமுகப்படுத்துவதில் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் மூலம் முகமட் இட்ரிஸ் சிறந்த முறையில் செயல்பட்டுள்ளார்.

மலேசிய பயனீட்டாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான தமது நம்பிக்கையில் சிறிது கூட விட்டுக் கொடுக்காமல், அதே வேளையில் அந்தப் போராட்டங்களில் முழு கடப்பாட்டுடன் செயல்பட்ட உன்னதமான மனிதராக முகமட் இட்ரிஸ் விளங்கினார் .அவரது மறைவு ஒட்டுமொத்த மலேசியர்களுக்கு பெரும் இழப்பாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன