வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > முகமட் இட்ரிஸ் நல்லடக்கச் சடங்கில் அமைச்சர்கள் உள்பட திரளானோர் பங்கேற்பு
அரசியல்முதன்மைச் செய்திகள்

முகமட் இட்ரிஸ் நல்லடக்கச் சடங்கில் அமைச்சர்கள் உள்பட திரளானோர் பங்கேற்பு

ஜோர்ஜ்டவுன் .மே 18

பயனீட்டாளர்களின் உரிமைகளுக்காகவும் சுற்றுச்சூழல் நலன்களுக்காகவும் கடந்த 40 ஆண்டு காலமாக வெளிப்படையாக குரல் கொடுத்து வந்த பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவரும் மலேசிய மண்ணின் தோழர் கழகத்தின் தலைவருமான எஸ்.எம் இட்ரிஸ்  அவர்களின் நல்லுடல் பினாங்கில் பேரா  சாலையிலுள்ள முஸ்லிம் மையத்துக்  கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில் அமைச்சர்கள், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் , சமுக ஆர்வலர்கள், உட்பட திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

93 வயதுடைய முகமட் இட்ரிஸ்  முதுமையின் காரணமாக  பினாங்கு கிளெனிக்கல் மருத்துவமனையில் நேற்று காலமானார்.

கைத்தொலைபேசியை பயன்படுத்தாமலேயே பயனீட்டாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் விவகாரத்தை பாதிக்கக்கூடிய பிரச்சனைகளை அரசாங்கத்திற்கும் மற்றும் உலகின் கவனத்திற்கும் கொண்டு வருவதில் அவர் விவேகமான முறையில் செயல்பட்டு வந்தார்.

பினாங்கு ஆளுனர் துன் அப்துல் ரஹ்மான் அபாஸ்,   பி.கே.ஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பினாங்கு  முன்னாள் முதலமைச்சர் டான்ஸ்ரீ  கோ சூ கூன் உட்பட வாழ்க்கையின் அனைத்து தரப்பட்ட மக்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தாம் பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் தமக்கு அறிமுகமான முகமட் இட்ரிஸ் குடும்ப ரீதியிலும் நல்ல நண்பராக இருந்து வந்ததாக  டத்தோஸ்ரீ அன்வார்  செய்தியாளரிடம் தெரிவித்தார்.

பயனீட்டாளர்களின் நலன்களுக்காகவும் சுற்றுச் சூழலுக்காகவும் தமது கடைசி மூச்சு வரை குரல் எழுப்பியவர்  முகமட் இட்ரிஸ் என அன்வார் புகழாரம் சூட்டினார். ஏழைகளின் நலன்களை புறக்கணிக்கவும்  வகையில் அளவுக்கதிகமான மேம்பாடு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அவர் தொடர்ந்து நினைவுறுத்தி வந்துள்ளார். இது தவிர குடிசைவாசிகளுக்கு வீடமைப்பு  வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் அவர் குரல் கொடுத்து வந்துள்ளார். முகமட் இட்ரிஸின் மறைவு ஒட்டுமொத்த மலேசிய மக்களுக்கு பெரிய இழப்பாகும் என அன்வார் கூறினார்.

1950 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் முகமட் இட்ரிஸ் பினாங்கு நகராண்மைக் கழக உறுப்பினராக இருந்தபோது மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வருவதில் அவர் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார் .

பினாங்கு நூல் நிலையத்தின் முன்னாள் தலைவருமான அவர் அந்த நூல் நிலையம் ஞாயிற்றுக் கிழமைகளிலும் மற்றும் இதர வார நாட்களிலும் இரவு 10 மணி வரை செயல்படுவதற்கான ஏற்பாட்டை செய்ததோடு  மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தார்.

இதுதவிர பினாங்கில் மரங்கள் நடும் இயக்கத்தையும் அவர் பெரிய அளவில் நடத்தி வந்தார்.இன்று ஜோர்ஜ்டவுன் நகரில் சாலையோரங்களில் பரவலாக மரங்கள் காணப்படுவதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகளே காரணம் என  பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அதிகாரியான என் .வி சுப்பராவ் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன