முகப்பு > சமூகம் > சவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும்! 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள்
சமூகம்முதன்மைச் செய்திகள்விளையாட்டு

சவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும்! 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள்

கோலாலம்பூர் மே 18-

சவால் மிக்க சாதனைக்கு என்றும் சரித்திரத்தில் இடம் உண்டு. அந்த வகையில் ஹார்லி டேவிட்சன் பைக் மூலம் உலகத்தை சுற்றி வர 9 இந்திய  வீரர்கள் மீண்டும் முடிவு செய்திருக்கிறார்கள்.

ஷேடோபெக்ஸ் மலேசியா – மசல் ரைடர்ஸ் குழுவைச் சேர்ந்த 9 பேர், தலைநகர் கோலாலம்பூர் தொடங்கி, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் வரை தங்களது பயணத்தை மேற்கொள்கிறார்கள். பின்னர் வியட்நாமிலிருந்து தங்களது பயணத்தைத் தொடங்கி கம்போடியா, தாய்லாந்து வழியாக மீண்டும் கோலாலம்பூரை வந்தடைவார்கள். 16 நாட்கள் இந்த பயணம் தொடரும் என ஷேடோபெக்ஸ் மலேசியா அமைப்பின் தலைவரும் இந்த பயணத்திற்கு தலைமையேற்றிருக்கும் டத்தோ ஆனந்த் கூறினார்.

ஹார்லி டேவிட்சன் பைக் இன் மூலமாக இவர்கள் ஒவ்வொரு நாளும் 450 கிலோ மீட்டர் முதல் 750 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யவிருகின்றார்கள். ஞாயிற்றுக்கிழமை காலை இந்த பயணம் அதிகாரப்பூர்வமாக தொடங்குகின்றது என ஆனந்த் குறிப்பிட்டார். மே 19 ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டு ஜூன் 4ஆம் தேதி மீண்டும் கோலாலம்பூரை வந்தடைந்தோம் என்றார் அவர்.

தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளில் முதன்மை சுற்றுலாத் தலங்களையும் தாங்கள் வலம் வர இருப்பதாக குறிப்பிட்ட அவர் மலேசிய நாட்டின் பெருமைகளை இதர நாட்டு மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த பயணம் அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

பொழுதுபோக்கு நேரங்களை நல்ல செயல்திட்டத்தில் செலவிட்டாலும் அது உடல்நலத்திற்கு நன்மையை கொண்டு வரும். ஓய்வு நேரங்களில் இதுபோன்ற பயணங்களில் ஈடுபடுவது மனதிற்கு ஒரு வகையான புத்துணர்ச்சியையும் தருகின்றது. அதோடு இயற்கையை ரசிப்பது என்பது அனைவரும் விரும்பக்கூடிய ஒன்றாகும். நாங்கள் 9 பேரும் இந்த 40 நாட்களுக்கு இயற்கையோடு பயணிக்கப் போகிறோம் என டத்தோ ஆனந்த் கூறினார்.

நாங்கள் பயணம் செய்யும் நாடுகளில் ஹார்லி டேவிட்சன் பைக்களை பயன்படுத்தும் வீரர்களும் எங்களின் பயணத்தில் இணைகிறார்கள். அந்தந்த நாடுகளில் உள்ள வீரர்கள் எங்களை அழைத்துக்கொண்டு தங்கள் ஊர்களை வலம் வரப்போகிறார்கள். இது நட்புறவை வளர்க்கும் என அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

முன்னதாக இந்தியா வரை பைக்கில் பயணம் செய்து இவர்கள் சாதனை படைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு 5600 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கவிருக்கும் இவர்களில் 2020 ஆம் ஆண்டு லண்டன் வரை பயணம் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.

9 பேர் கொண்ட இந்தப் பயணத்தில் 60 வயதான என்.ஆர். துரையும் கலந்து கொள்கிறார். டத்தோ ஆனந்த் தலைமையில் குமார், நெல்சன், மார்ட்டின், ராஜா, கோபிந்தன், விஜய், வேணு ஆகியோர் 5600 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்கின்றார்கள். இவர்களின் பயணம் வெற்றி அடைய அநேகன் இணையத்தள பதிவேடு வாழ்த்துகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன