அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > கல்வி அமைச்சர் பதவியிலிருந்து டாக்டர் மஸ்லியை நீக்குவதற்கு ஜ.செ.க முயற்சியா? -லிம் கிட் சியாங் மறுப்பு
அரசியல்முதன்மைச் செய்திகள்

கல்வி அமைச்சர் பதவியிலிருந்து டாக்டர் மஸ்லியை நீக்குவதற்கு ஜ.செ.க முயற்சியா? -லிம் கிட் சியாங் மறுப்பு

கோலாலம்பூர், மே 20-

கல்வி அமைச்சர் பதவியிலிருந்து டாக்டர் மஸ்லி மாலேக்கை நீக்குவதற்கு ஜ.செ.க முயற்சியை மேற்கொண்டு வருவதாக கூறப்படும் தகவலை அக்கட்சியின் மூத்த  தலைவரான லிம் கிட் சியாங் மறுத்துள்ளார். இப்படி ஒரு தகவல் உண்மைக்குப் புறம்பான ஒன்று என இஸ்கந்தர் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் தெரிவித்தார்.

அடுத்த பொதுத் தேர்தலில் கூட்டரசு அரசாங்கத்தின் அதிகாரத்தை  கைப்பற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் மற்றொரு தந்திரங்களில் ஒன்றாக இது இருப்பதோடு நம்பிக்கை கூட்டணி  உறுப்பு கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்குமிடையே பிளவுகளை  ஏற்படுத்தும் நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

கல்வி அமைச்சர் மஸ்லியை நீக்கிவிட்டு அத்துறையின் துணை அமைச்சராக இருந்து வரும் தியோ நீ சிங்கை  கல்வியமைச்சராக நியமிக்கும்படி பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அவர்களுக்கு ஜ.செ.க நெருக்குதல் அளித்து வருவதாக எதிர்க் கட்சிக்கு ஆதரவான செய்தி தளம்  ஒன்றில் வெளியான தகவல் குறித்து லிம் கிட் சியாங் கருத்துரைத்தார்.

மஸ்லிக்கு பதில் தியோவை கல்வி அமைச்சராக நியமிக்கும்படி பிரதமரை  ஜனநாயக செயல் கட்சி கேட்டுக் கொள்ளவில்லை. மேலும் மஸ்லியை நீக்குவதற்காக ஜ.செ.க அதன் உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டை நடத்துவதாக கூறப்படும் தகவலையும் அவர் மறுத்தார்.

இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நம்பிக்கை கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் நோக்கத்தில் எதிர்க்கட்சி திட்டமிட்டே இப்படி ஒரு வதந்தியை பரப்பி வருவதாகவும் லிம் தெரிவித்தார்.

மலாய்காரர்களின் உரிமைகள் மற்றும் இஸ்லாத்திற்கு மிரட்டல் ஏற்பட்டிருப்பதாகவும் நம்பிக்கை கூட்டணியை ஜ.செ.க   ஆக்கிரமித்துள்ளதாகவும் தேர்தல் வாக்குறுதியை நம்பிக்கை கூட்டணி மீறி விட்டதாகவும் பல்வேறு பொய்யான தகவல்கள் இதற்கு முன் பரப்பப்பட்டதையும் லிம் சுட்டிக்காட்டினார்.

முக்கிய விவகாரங்களில் நம்பிக்கை கூட்டணி உறுப்புக் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதை மறுக்க முடியாது .ஆனால் தலைவர்கள் எல்லா நிலைகளிலும் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்து எங்களது தேர்தல் கொள்கை அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு முழு கடப்பாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர் என்பதை தாம் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புவதாக லிம் கிட் சியாங் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன