இவ்வாண்டு பொதுத்தேர்தலா?

0
12

பெட்டாலிங் ஜெயா, ஆக.20-
அடுத்த ஆண்டிற்கான பட்ஜெட் வரும் அக்டோபர் மாதத்திற்கு தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில் 14ஆவது பொதுத்தேர்தல் இந்த ஆண்டில் நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை என மலாயாப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் அவாங் அஸ்மான் பவி தெரிவித்தார்.

2018க்கான பட்ஜெட் வரும் அக்டோபர் 27ஆம் தேதி பிரதமர், டத்தோஸ்ரீ நஜீப் தாக்கல் செய்யவிருப்பதால் அதன் பிறகு தேர்தல் வைத்தால் மிகவும் நெருக்கமாக இருக்கும். இதில் பொதுச்சேவை ஊழியர்களுக்குக் குறைந்தபட்சம் ஒரு மாத போனஸ் தொகை பற்றி அறிவிக்கக்கூடும் என சிலர் எதிர்பார்க்கிறார்கள்.

அதிலும் 2018இல் அதிக வாக்காளர்களைக் கவர்வதற்கென பல மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றியும் அறிவிக்கக்கூடும். இருந்த போதிலும் பட்ஜெட் மதிப்பீட்டை நாடாளுமன்றத்தில் அங்கீகரிப்பதற்கு முன்பு அதுபற்றி வரும் அக்டோபர் 23 தொடங்கி நவம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறும் மக்களவைக் கூட்டத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

இதில் மேலவைக் கூட்டத் தொடர் நவம்பர் 4 தொடங்கி டிசம்பர் 19ஆம் தேதி வரைதான் நடைபெறும். இதன் அடிப்படையில் பார்க்கும் போது பொதுத்தேர்தல் இவ்வாண்டில் நடைபெறுவதற்கான சாத்தியமில்லை என்றே கருதப்படுகிறது என பத்திரிகையாளர்களிடம் அவாங் அஸ்மான் குறிப்பிட்டார். இதனிடையே நாட்டின் பொருளாதாரம் மத்திய அரசுக்கு சாதகமானதாக இல்லை என்பதால் இவ்வாண்டில் பொதுத்தேர்தல் நடத்தும் சாத்தியமில்லை.

இதில் நாடு முழுவதும் பதிவுப் பெற்ற 3,783 வாக்காளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மதிப்பாய்வின்படி நாட்டின் பொருளாதாரம் தவறானப் பாதையில் சென்றுக் கொண்டு இருப்பதோடு கடந்த 2013ஐக் காட்டிலும் இப்போது பொருளாதாரம் மிகவும் மோசமாக இருப்பதாக இவர்களில் 60 விழுக்காட்டினர் கருதுவதாக அவாங் அஸ்மான் பவி கூறினார்.