அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > மலேசிய இந்து ஆகம அணியின் “ஆலயம் மற்றும் சமுதாய சேவை” மாநாடு
மற்றவை

மலேசிய இந்து ஆகம அணியின் “ஆலயம் மற்றும் சமுதாய சேவை” மாநாடு

பெட்டாலிங் ஜெயா,மே.21-

இன்றைய காலக்கட்டத்தில் வழிபாடு தலங்களாகவும் சமூக சேவை மையங்களாகவும் இருக்க வேண்டிய நாட்டில் உள்ள ஆலயங்கள் சில, அவற்றின் நிர்வாகத்தினால் பணம் சம்பாதிக்கும் தளங்களாக பயன்படுத்தபட்டு வருகின்றன.

இந்த நிலைமையை உருமாற்ற மலேசிய இந்து ஆகம அணி அமைப்பு “ஆலயம் மற்றும் சமுதாய சேவை” எனும் தலைப்பில் மா நாட்டை நடத்தவுள்ளது. இம்மாநாடு வரும் மே 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சிவிக் செண்டரில் பிற்பகல் 2 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மனிதவள அமைச்சர் குலசேகரன் கலந்து கொள்ளவிருக்கிறார். அவருடன் இந்து மதத்தைச் சார்ந்த நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், ஆலய நிர்வாகத்தினர், அங்கீகரிக்கப்பட்ட இந்து சமய அரசு சாரா இயக்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொள்வர்.

ஆலங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறிப்பாக பொருளாதார அம்சத்தில் நிகழும் தவறுகளை அடையாளம் காணும் முறைகள், அவற்றை சரி செய்வதற்கு முன்னெடுக்கக்கூடிய வழிமுறைகள் குறித்து  இம்மாநாட்டில் பேசப்படும். பிராத்தனையுடன் தொடங்கும் இம்மாநாட்டின் துவக்கத்தில் இந்து சமய அரசு சாரா இயக்கங்களின் தலைவர்களுக்கும் இந்து சமய மேம்பாட்டிற்கு தொண்டாற்றியவர்களுக்கும் சிறப்பு செய்யப்படும்.

அதன் பின் “ஆலயம் மற்றும் சமுதாய சேவை” என்ற தலைப்பில் ஆகம அணியின் தலைவர் அருண் துரைசாமி விளக்க உரை வழங்குவார். தொடர்ந்து அமைச்சர் குலசேகரனின் தலைமையுரை இடம் பெறும். அதே சமயத்தில் பெட்டாலிங் ஜெயாவில் செயல்ப்பட்டு வரும் இந்து சேவை மையத்தின் அதிகாரப்பூர்வ அறிமுக விழாவும் நடைபெறும். இம்மையத்தை அமைச்சர் அறிமுகம் செய்வார்.

அதன் பின்னர் சிலாங்கூர், கூட்டரசு பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த ஆலயங்கள் தங்களின் சமுதாய சேவை திட்டத்தை தொடங்குவதற்கு தேவைப்படும் மானியங்கள் சார்ந்த தகவல்களும் அதனை பெறுவதற்கான வழிமுறைகளும் குறித்த விளக்கங்களும் வழங்கப்படும். ஆலய நிர்வாகங்கள் இந்த இம்மானியங்களை பெறுவதற்கு ஆகம அணியும் இந்து சேவை மையமும் வழிகாட்டியாக செயல்ப்படும்.

மேலும் இம்மாநாட்டில் ஆலங்களில் நிகழும் முறைகேடுகள் ( பொருளாதாரம்) குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தைச் சார்ந்த அதிகாரிகள் விளக்கம் அளிப்பர். முறைகேடுகளை அடையாளம் கண்டு அவற்றை உரிய நேரத்தில் சட்டத்தின் பார்வைக்கு கொண்டு செல்லும் வழிமுறைகளை அவர்கள் விளக்குவர்.

இதனிடையே இம்மாநாட்டில் ஆலயங்களின் மைய உதவியுடன் “தர்மா” நன்கொடை திட்டம் துவங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தில் ஆண்டுதோறும் கிடைக்கப்பெறும் நன்கொடைகள் வழி இந்து சமய வாழ்வியல் சார்ந்த கல்வி திட்டங்கள் பயிலும் மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்படும். இந்து சமய இயக்கங்களின் தலைவர்கள் இந்த திட்டத்திற்கு அறங்காவலராக செயல்படுவர்.

இந்து சமய அறப்பணி வாரியம் குறித்த மித்ராவின் துண்டறிக்கையும் இம்மாநாட்டில் வழங்கப்படும்.

இது மட்டுமல்லாது அன்றைய தினம் மாநாடு நடைபெறும் இடத்தில் காலை மணி 11 தொடங்கி இந்து சேவை மையத்தின் முகப்பிடங்கள் செயல்படும். அங்கு மதமாற்றம், கல்வி, குழந்தை தத்தெடுப்பு, வியபார கடன் வசதிகள், குடியுரிமை, மருத்துவம் போன்ற விவகாரங்கள் குறித்து தகவல் பரிமாற்றம் நடைபெறும்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு சுமார் 2,500 தரப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு நேர்மறை அம்சங்களை கொண்ட இந்த மா நாட்டில் கலந்து கொண்டு பயன் பெறும்படி அதன் ஏற்பாட்டாளரும் ஆகம அணியின் தலைவருமான அருண் துரைசாமி கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன