தேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது! பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

பினாங்கு மே 23-

மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

மனிதர்கள் வாழ்க்கை நலனில் மாபெரும் பங்களிப்பை வழங்கி வரும் தேனீக்களை சாதாரணமாகக் கருதி அவற்றை அழிக்கும் நடவடிக்கைகளில் மனிதர்கள் ஈடுபடுவார்களேயானால், அஃது நமது பேரழிவுக்கு நாமே காரணமாக விளங்குவதற்கு சமம் என்று
அந்த அமைப்பு எச்சரித்திருக்கிறது.

தாவரங்களின் வளர்ச்சிக்கும் பெருக்கத்திற்கும் தேனீக்கள் புரிகின்ற பேருதவியை பெரும்பாலோர் அறிவதில்லை அல்லது உணர்வதில்லை என்றும் இதனாலேயே தேனீக்கள் மனிதர்களால் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவின் பொறுப்பாளர் என்.வி.சுப்பாராவ் குறிப்பிட்டார்.

தேனீக்கள் ஆங்காங்கே கூடு கட்டுகின்ற நிலமை தற்போது பெருமளவில் குறைந்து விட்டிருப்பதற்கு காரணமே மனிதக் குலம் தான் என்று கவலை தெரிவித்த அவர்,இன்றைய வாழ்க்கை முறையில் மனிதர்கள் பயன்படுத்தும் விஷத் தன்மை கொண்ட பூச்சிக் கொல்லி மருந்து வகைகளே முதற் காரணமென்று சுட்டிக் காட்டினார்.

மனிதர்கள் பயன்படுத்துகின்ற பூச்சிக் கொல்லி மருந்து வகைகளால் தேனீக்களின் இனப் பெருக்கம் பெருமளவில் குறைந்து விட்டதாகவும், அவை தங்களின் இருப்பிடங்களிலிருந்து ஓடி மறைந்து வரும் அவல நிலையே அவற்றின் இல்லா நிலைமைக்கு காரணமென்று அவர் தெளிவுப்படுத்தினார்.

அண்மையில் அனைத்துலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு, இங்கு தண்ணீர்மலை சாலையில் அமைந்திருக்கும் அசாத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் தேனீக்களின் அருமை குறித்து சுப்பாராவ் விளக்கவுரை நிகழ்த்தியபோது, மேற்கண்ட கருத்துக்களை ஆணித்தரமாக பட்டியலிட்டுப் பேசினார்.

பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி கோகிலாம்பாள் திறந்து வைத்த இந்நிகழ்ச்சிக்கு பினாங்கு இந்து சங்கப் பேரவையின் தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் தர்மன் தலைமை வகித்தார். தேனீக்களின் தொடர் அழிவினால் மனித குலத்திற்கு  காத்திருக்கும் பேரபாயத்தை சுப்பாராவ் மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.

விவசாயத் துறையில் தற்போது மனிதர்கள் பயன்படுத்தி வரும் நியோ நிகோடினாய்ட் எனப்படும் கடும் நச்சுத் தன்மை கொண்ட பூச்சிக் கொல்லியால் தேனீக்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விட்டிருப்பது வேதனையை அளிப்பதாக சுப்பாராவ் கூறினார்.

ஆங்காங்கே தேனீக்களின் கூடுகள் அழிக்கப்படுவது ஒருபுறமிருக்கையில்,நகர்புற மேம்பாடுகளால் காடுகளும் மரங்களும் பூக்களும் அழிக்கப்படுவது மகரந்தச் சேர்க்கைக்கு பெரும் பின்னடைவு என்பதை உணர்த்திய அவர்,இதுவே தேனீக்களின் இன உற்பத்திக்கு பெரிதும் முட்டுக்கட்டையாகிவிட்டது என்றும் மனம் முமுறினார்.

இவ்வகை நச்சுத் தன்மை கொண்ட பூச்சிக் கொல்லிகள் தெளிக்கப்படும்போது தேனீக்களீன் மூளை பாதிக்கப்பட்டு அவை ஞாபக சக்தியை இழக்க நேரிடுவதாகவும்,இதன் பொருட்டு அவை தங்களின் இருப்பிடத்திற்கு திரும்ப முடியாமல் மடிந்து விடுவதாகவும் சுப்பாராவ் விவரித்தார்.

பூக்கள் தான் தேனீக்களின் ஜீவநாடி என்றும், பூவிலிருந்து தேனை உறிஞ்சி, அவற்றை கூடுகளில் சேகரித்து வைக்கப்படும் தேன் தான் மனிதர்களுக்கு பயன் தருவதாகக் கூறிய அவர், ஒரு தேக்கரண்டி தேனை சேகரிக்க, தேனீக்கள் பல ஆயிரம் பூக்களின் தேனை உறிஞ்ச வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டார்.சராசரியாக ஒரு தேனீ, தன் வாழ்நாளில் ஒரு தேக்கரண்டி தேனைத் தான் சேகரிக்கும் என்றும் அதன் ஆயுள் 2 மாதமே என்றும் அவர் கூறினார்.

தேனீக்களின் ஒழுக்கமான கட்டுப்பாட்டு வாழ்க்கை முறை குறித்தும் மாணவர்கள் மத்தியில் பேசிய சுப்பராவ், தேனீக்களின் இனப் பெருக்கத்திற்கு மனிதர்களாகிய நாம் அதிக அளவில் பயிர்களையும் பூச்செடிகளையும் நடுவது நன்மை பயக்குமென்று இந்நிகழ்ச்சியின் வாயிலாக சுப்பாராவ் மாணவர்களுக்கு உணர்த்தினார்.