வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > இந்திய மாணவர்கள் பரிதவிக்கும் போது பாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளமா? புனிதன் பரமசிவன்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

இந்திய மாணவர்கள் பரிதவிக்கும் போது பாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளமா? புனிதன் பரமசிவன்

கோலாலம்பூர், மே. 23-

உயர்கல்விக் கூடங்களில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் இந்திய சமுதாயத்தின் பிரச்சனைக்கு இன்றளவும் தீர்வு காணப்படாத பட்சத்தில், பாலஸ்தீன மாணவர்களுக்கு உயர் கல்வி பயில்வதற்கு உபகாரச் சம்பளம் வழங்கும் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் நடவடிக்கை எவ்வகையில் நியாயம் என மலேசிய இந்திய காங்கிரசின் மத்திய செயலவை உறுப்பினர் புனிதன் பரமசிவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலஸ்தீன மாணவர்கள் 12 பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கு அரசாங்கம் 11.4 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் உயர் கல்வியில் இடம் கிடைக்காத இந்திய மாணவர்களின் நிலை என்ன? ஏன் இந்த பாரபட்சம் என புனிதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மெட்ரிகுலேஷன் விவகாரத்தில் இன்றளவும் தீர்வு காணப்படவில்லை. மெட்ரிகுலேஷனில் 4 ஆயிரம் இடங்கள் பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் அதில் எத்தனை இந்திய மாணவர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள் என்ற தகவல் வெளி வரவில்லை.

முன்னதாக கடந்த தேசிய முன்னணி அரசு இந்தியர்களுக்காக சிறப்பு திட்ட வரைவை உருவாக்கியது.  அதில் உயர்கல்விக் கூடங்களில் இந்திய மாணவர்களுக்காக 7 விழுக்காடு இடம் உறுதி செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் எந்த நடவடிக்கையும் இதுநாள்வரை முன்னெடுக்கவில்லை என புனிதன் சாடினார்.

மெட்ரிகுலேஷனில் இந்தியர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டதைப்போல உயர்கல்வி வாய்ப்புகளிலும் இந்தியர்கள் ஓரங்கட்டப்படுவார்களா? என்பது தெரியாமல் இந்த சமுதாயம் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது என அவர் மேலும் கூறினார்.

மலேசியாவை தாய்மண்ணாகக் கொண்ட இந்தியர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படும் பட்சத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவது எவ்வகையில் நியாயம்? காட்டில் இருக்கும் பறவைக்கு உணவளிக்கும் இந்த அரசாங்கம் வீட்டில் இருக்கும் குழந்தையை மறந்து விட்டது என புனிதன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் அரசாங்க கடனுதவியுடன் கல்வி பயிலும் இந்திய மாணவர்களுக்கும் பிரச்சனைகள் எழுந்துள்ளது. பிடிபிடிஎன் கடன் உதவியை எதிர்பார்க்கும் இந்திய மாணவர்களும் சிக்கல்களை எதிர்நோக்க தொடங்கியுள்ளார்கள். மாணவர்கள் கடன் உதவியை பெறுவதற்கு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய சூழ்நிலை இப்போது எழுகின்றது.

அதோடு கல்விக்கு தேவைப்படும் மொத்த தொகையில் 85 விழுக்காடு கடனுதவி மட்டுமே வழங்கப்படுகின்றது. அதிலும் பல மாணவர்களுக்கு படிப்பதற்கு செலவிடும் மொத்த தொகையில் இருந்து 75, 50 விழுக்காடு மட்டுமே கடனுதவியாக கிடைத்திருக்கின்றது.

இதைத் தவிர்த்து பல்கலைக்கழக பதிவு உட்பட தேர்வு கட்டணங்களையும் செலுத்துவதற்கு இந்திய மாணவர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றார்கள். இந்த பிரச்சனைக்கு அரசாங்கம் எப்போது தீர்வு வழங்கும் என அவர்கள் காத்திருக்கிறார்கள் என்பதையும் புனிதன் சுட்டிக்காட்டினார்.

உயர்கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் இடம் கிடைப்பதற்கும் இடம் கிடைத்த பிறகு தங்களின் கல்வியை தொடர்வதற்கு பொருளாதார ரீதியில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இதை தீர்ப்பதற்கு அரசாங்கம் முனைப்புக் காட்ட வேண்டும். அதைவிடுத்து வெளிநாட்டு மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்குவது எந்த வகையிலும் நியாயம் ஆகாது என புனிதன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன