ஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம்! – ஓமஸ் தியாகராஜன்

கிள்ளான், மே 21-

வரும் 2020ஆம் ஆண்டுக்குள் மலேசிய வன்னியர் நலனபிவிருத்தி சங்கத்தின் மொத்த ஆயுள் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தது 25,000த்தை எட்டும்.  அடுத்தாண்டு இந்த சங்கத்தின் மாநாடு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெறும். அப்போது குறைந்தபட்சம் 10,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வர் என்று அச்சங்கத்தின் தேசியத் தலைவர் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன்  தெரிவித்தார்.

கிள்ளான் லெட்சுமணா மண்டபத்தில் நடைபெற்ற மலேசிய வன்னியர் நலனபிவிருத்தி சங்கத்தின் 18ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் தலைமை உரையாற்றியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும்  இயக்கமல்ல, நம்முடைய சங்கம். அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்து உறுப்பினர்களை உயர்த்தும் சங்கமே நம்முடைய சங்கம். இதை நாங்கள் செய்திருக்கிறோம் என்று நம்புகிறேன் என செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன் தெரிவித்தார்.

மலேசிய வன்னியர் நலனபிவிருத்தி சங்கத்தின் மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு 21 பேர் போட்டியிட்ட வேளையில் அவர்களில் 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நாட்டில் பக்காத்தான் ஆட்சி அமைந்த பிறகு ஏராளமான வன்னியர் சொந்தங்கள், நம்முடைய சங்கத்தில் உறுப்பினர்களாக இணைந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த காலத்தில் மிக வெளிப்படையாகவே அப்போதைய எதிர்க்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட நம்முடைய வன்னியர் சங்கம் இப்போதைய ஆளுங்கட்சியின் தனி மதிப்பைப் பெற்ற இயக்கமாகவே விளங்குகிறது. இன்று நாம் ஆளுங்கட்சியின் ஆதரவைப் பெற்ற இயக்கமாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாத சிலர் தங்களின் வயிற்றெரிச்சலை பலவாறாகக் காட்ட நினைக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

அப்படிப்பட்ட வயிற்றெரிச்சலில் வெளியிடப்பட்ட செய்திதான் சிலாங்கூர் மாநில இடைநிலைப்பள்ளி தமிழ் மொழிப் பிரிவு துணை இயக்குனர் பதவிக்கான நியமனத்தில் தனது தலையீடு இருந்ததாக வெளியான அவதூறாகும்.

வன்னியர் சொந்தங்களுக்குள் திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களுக்கு தங்கப் பதக்கம் அணிவிக்கும் அங்கம் நடைபெற்றபோது

இன்று மலேசிய வன்னியர் நலனபிவிருத்தி சங்கம் அரசாங்கத்தோடும் மற்ற பொது இயக்கங்களோடும்  மிக அணுக்கமான தொடர்புடைய இயக்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் இந்த அரசாங்கம் எதிர்க்கட்சியாக இருந்தபோது குறிப்பாக அவர்கள் துன்பத்தை அனுபவித்தபோது நாம் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து வந்தோம். கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்கு முன்னதாகவே டத்தோஸ்ரீ அன்வாரை வரவழைத்து கோலலங்காட்டில் பிரமாண்டமான பொங்கல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருக்கிறோம்.

இதுவரையில் நம்முடைய சங்க ஆண்டுக்கூட்ட நிகழ்ச்சிக்கு எந்த அரசியல்வாதியையும் நாம் சிறப்புப் பிரமுகராக அழைத்ததில்லை. டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் முதன் முதலாக நம்முடைய நிகழ்ச்சிக்கு அவரே நேரடியாக தொடக்கி வைப்பார் என்றும் ஓம்ஸ் தியாகராஜன் தெரிவித்தார்.

குறிப்பாக வன்னியர் சங்கத்தின் தேசியத் தலைவராக தாம் பொறுப்பேற்றிருக்கும் நிலையில் அந்தப் பதவிக்குப் போட்டியை ஏற்படுத்தி சங்கத்தில் குளறுபடிகளை உண்டாக்க சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்  சில சதிவேலைகளைச் செய்திருந்தார்.

அந்த ஆட்சிக்குழு உறுப்பினரின் கார் ஓட்டுனர் ஒரு வன்னியராவார். அவரைத் தூண்டிவிட்டு அந்த ஆட்சிக்குழு உறுப்பினர் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள முனைந்திருக்கிறார்.  தம்மோடு போட்டி போட வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டால் நேருக்கு நேர் மோதுவதுதான் ஆரோக்கியமான போட்டியாக இருக்கும்.

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் அந்த ஆட்சிக்குழு உறுப்பினர்  போட்டியிட்ட சட்டமன்றத் தொகுதியில் என்னுடைய எதிர்ப்பைக் காட்டுவதற்காக அவரை எதிர்த்து சகோதரர் ராஜசேகரனை சுயேட்சை வேட்பாளரை களமிறக்கி நேருக்கு நேர் மோதியவன் நான்.

போட்டியிட வேண்டுமென்றால் அப்படி நேருக்கு நேர் போட்டியிட வேண்டும். அதைவிடுத்து பிறரைத் தூண்டிவிட்டு பின்புறமாக போட்டியை ஏற்படுத்தும்  பூச்சாண்டி வேலைக்கெல்லாம் தாம் அஞ்சப் போவதில்லை என்றும் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன் தெரிவித்தார்.

1 COMMENT

  1. மலேசியா வன்னியர் சங்க தலைவர்களுக்கு வாழ்

Comments are closed.