இந்திய நாடாளுமன்றத் தேர்தல்: அபரிதமான வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் பதவி ஏற்கிறார் மோடி

புதுடெல்லி மே 23-

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான (BJP) பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இதுவரை 345 இடங்களை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி 94 இடங்களை வென்றுள்ளது. திரினாமுல் 22 இடங்களையும் இதர சிறு கட்சிகள் 81 தொகுதிகளையும் வென்றுள்ளன. தமிழகத்தில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 37 இடங்களை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

அதிமுக கூட்டணி 2 இடங்களை மட்டுமே வென்றது .ஆம்பூரில் திமுக வேட்பாளர் வில்வநாதன் வெற்றி பெற்றார். சென்னையில் தி.மு.க.வின் தயாநிதி மாறன் வெற்றி பெற்றார். தூத்துக்குடி தொகுதியில் திமுகவில் கனிமொழி வெற்றி பெற்றார். திமுக மகளிரணி தலைவியுமான கனிமொழி பாஜக வேட்பாளர் தமிழிசையை தோற்கடித்தார்.

தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அவற்றின் 13 தொகுதிகளில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றன. இதர 9 தொகுதிகளில்  அதிமுக வெற்றி பெற்றது. ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் மீண்டும் பெரிய பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

அதே வேளையில் ராகுல் காந்தி உத்தர பிரதேசத்தில் அமேதி தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் ஸ்மிரிதி இரானியிடம் அதிகமான வாக்குகளில் பின் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது . அவர் கேரளாவில் வயனாட் நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டார். அந்த தொகுதியில் 3 லட்சம் வாக்குகளுக்கும் அதிகமாக பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி நிராகரிக்கப்பட்டுள்ளது.. அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தோல்வி கண்டனர்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்க இருக்கிறார்.