புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > அம்ரி, பாஸ்டர் ரேமண்ட் காணாமல் போன சம்பவத்தை ஆராய சிறப்பு பணிக்குழு!  – டான்ஸ்ரீ முகைதீன்
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

அம்ரி, பாஸ்டர் ரேமண்ட் காணாமல் போன சம்பவத்தை ஆராய சிறப்பு பணிக்குழு!  – டான்ஸ்ரீ முகைதீன்

புத்ராஜெயா, மே 24-

சமூக இயக்கவாதி அம்ரி சே மாட் மற்றும் பாஸ்டர் ரேமண்ட் கோ காணாமற் போனதற்கு போலீஸ்காரர்களே காரணம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையத்தின் (சுஹாகாம்) குற்றச்சாட்டை ஆராய சிறப்பு பணிக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இவ்விவகாரம் தொடர்பில்  சிறப்பு பணிக்குழுவை அமைக்க அமைச்சரவை இணக்கம் தெரிவித்ததோடு இதன் உறுப்பினர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் என்றும் உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் கூறினார்.

” சுஹாகாமின் அறிக்கை கடுமையானது. ஆகையால், இதனை இந்தச் சிறப்புக் குழு  ஆராயும் “” என்று முகைதீன் குறிப்பிட்டார். “ஆய்வு முடிவுற்ற பின்னர் இக்குழு உரிய நடவடிக்கைகளை  பரிந்துரை செய்யும்’ என்று நேற்று உள்துறை அமைச்சின் பணியாளர்களுடன் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தெரிவித்தார் .

போலீஸ் பிரதிநிதிகள் உட்பட சிலரின் பெயர்கள் பணிக்குழு உறுப்பினர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்றார் அமைச்சர். ” இந்தப் பணிக் குழுவில்  போலீஸ் காரர்களும் இடம் பெற்றிருப்பர் என்பது உண்மையே. ஆனால், இதன் உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்படாதவர்களாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என்று அவர் மேலும் சொன்னார்.

” உதாரணமாக, சிறப்பு பிரிவு மீது குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதால் இவர்கள்   பணிக்குழு உறுப்பினர்களாக நிச்சயம் சேர்த்துக்  கொள்ளப்படமாட்டார்கள் ” என்றார் முகைதீன்.     அம்ரி மற்றும் பாஸ்டர் ரேமண்ட் இருவரும் புக்கிட் அமான் சிறப்புப் பிரிவினரால் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டதாக கவனமுடனும்  ஆழமான விவாதத்திற்குப் பின்னரும் சுஹாகாம் கடந்த ஏப்ரல் மாதம் ஏகமனதாக  முடிவு செய்தது.

இவ்விருவரும் காணாமல் போன சம்பவம் தொடர்பில் மீண்டும் விசாரணை நடத்த சிறப்பு பணிக்குழு ஒன்றை அமைக்கும்படியும் இந்த ஆணையம் கேட்டுக் கொண்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன