அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > நேர்மையான வழியில் போனால் ஜெயிக்கலாம்.. நம்பிக்கை தந்த மக்கள்.. நெகிழ்ச்சியுடன் கமல் நன்றி!
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

நேர்மையான வழியில் போனால் ஜெயிக்கலாம்.. நம்பிக்கை தந்த மக்கள்.. நெகிழ்ச்சியுடன் கமல் நன்றி!

சென்னை, மே.24:

வாக்களித்த மக்களுக்கு நன்றியை உரித்தாக்கிய கமல்ஹாசன், கிராமப்புறங்களில் தங்களுக்கு வாக்குகள் கிடைக்காமல் போக காரணம் பாதுகாக்கப்பட்ட ஏழ்மையே என்றும், அரசியல் கட்சிகள் தங்களது ஆதாயத்துக்காக ஏழ்மையை அகற்றாமல் பாதுகாக்கின்றன என்றும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

நேற்றைய வாக்கு எண்ணிக்கையில் மக்கள் நீதி மய்ய கட்சியையும் உயர்த்தி அழகு பார்த்தது தமிழகம். கட்சி ஆரம்பித்து ஓராண்டு ஆன சுவடு இல்லாமல், முதிர்ச்சியான கட்சியாக வாக்குகள் தென்பட்டன. இனி வரும் காலங்களில் மக்கள் நீதி மய்யம் தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்ற அளவுக்கு அரசியல் நோக்கர்கள் கருத்து சொல்லி வருகிறார்கள்.

இப்போது, வாக்கு நிலவரத்துக்கு பிறகு முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன். வாக்களித்த மக்களுக்கு வழக்கமாக சொல்லும் நன்றி போல் இல்லாமல், இனி தனக்கு இருக்கும் கடமையை அழுத்தமாகவே சொன்னார் கமல். அப்போது அவர் சொன்னதாவது:

எங்களது வேட்பாளர்களை வெற்றி வேட்பாளர்களாகத்தான் நான் கருதுகிறேன். அற்புதமான உறுதியையும், அரவணைப்பையும் மக்கள் எங்களுக்குக் கொடுத்துள்ளனர். இந்த அற்புதமான வாக்குகளை அளித்த மக்களுக்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர்.

நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கையை இது எங்களுக்கு அளித்துள்ளது. அது மட்டும் இல்லை. நேர் வழியில் சென்றாலும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் கொடுத்துள்ளனர். நேர்மையான முறையில் எனது கட்சி வேட்பாளர்கள் ஓட்டுக்களைப் பெற்றுள்ளனர் அதே நேரத்தில் இந்த தேர்தல் தோல்வி கண்டு நாங்கள் துவண்டு போய் விடவில்லை. தமிழக மக்களுக்கு தொடர்ந்து செயலாற்றுவோம்.

புதிதாக உருவான இந்த கட்சிக்கு மக்கள் அளித்துள்ள இந்த ஆதரவு எங்களை பொருத்தவரை மிகப் பெரியது. மக்களிடம் வெகுவாக எங்களைக் கொண்டு சேர்த்தது ஊடகங்கள்தான். அதை மறுக்க முடியாது.

பணப் புயல் வீச்சுக்கு மத்தியில் எங்களுக்கு வாக்குகள் கிடைத்தது பெரிய சாதனைதான். கிராமப்புறங்களில் எங்களுக்கு வாக்குகள் கிடைக்காமல் போக காரணம் பாதுகாக்கப்பட்ட ஏழ்மையே. அரசியல் கட்சிகள் தங்களது ஆதாயத்துக்காக ஏழ்மையை அகற்றாமல் பாதுகாக்கின்றன.

எங்களுக்கு இனிமேல் பெரும் கடமை உள்ளது என்பதை மக்கள் உணர்த்தியுள்ளனர். இதுபோன்ற நேர்மையான வாக்காளர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இனி துவண்டு விடாமல் நெஞ்சு நிமிர்த்தி தொடர்ந்து கட்சியை கொண்டு செல்வேன்” என்றார் அதே மன திடத்துடன்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன