புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > இந்திய பொதுத் தேர்தலில் அசத்திய நாம் தமிழர் கட்சி..!
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

இந்திய பொதுத் தேர்தலில் அசத்திய நாம் தமிழர் கட்சி..!

சென்னை, மே.24 –

நாம் தமிழர் கட்சி முதல் முறையாக மிகப் பெரிய சாதனையை செய்துள்ளது. அவர்கள் கட்சி தொடங்கிய இத்தனை காலத்தில் இப்போதுதான் பல லட்சம் வாக்குகளை அள்ளி எடுத்து அதிசயிக்க வைத்துள்ளனர். இனவாதம் பேசுகிறார், கத்துகிறார், இளைஞர்களை தூண்டி விடுகிறார் என்று எத்தனயோ விமர்சனங்கள் இருந்தாலும் எதையும் பொருட்படுத்தாமல் நடை போட்டு வருகிறார் சீமான்.

யாரெல்லாம் அவரை கடுமையாக விமர்சிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் அவர் நிதானமாக பல கேள்விகளை முன்வைக்கிறார். அதற்கு உரிய பதில்களை கொடுப்பவர்கள் விரல் விட்டும் எண்ணும் அளவிலேயே உள்ளனர். அவர்களும் கூட தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திரும்பும் நிலைதான் உள்ளது. இப்படி தன்னை நோக்கி பாயும் அம்புகளையே படிக்கட்டாக மாற்றி மக்கள் மனதில் ஏறி அமர்ந்திருக்கிறார் சீமான்.

நாம் தமிழர் கட்சி சி.பா. ஆதித்தனார் ஆரம்பித்து நடத்தியது. பின்னர் அது மறைந்து போய் விட்டது. அதை கையில் எடுத்தார் சீமான். நாம் தமிழர் இயக்கமாக அதை ஆரம்பித்து பின்னர் கட்சியாக மாற்றினார். காவிரிப் பிரச்சினை, ஈழப் பிரச்சினையின்போது சீமான் முழங்கிப் பேசியது தமிழக மக்களால் மறக்க முடியாதவை. அதுதான் சீமான் அடித்தளம்.

நாம் தமிழர் கட்சியை ஒற்றை ஆளாக வளர்த்த சீமான் அத்தோடு நிற்கவில்லை அக்கட்சியின் ஒவ்வொருவரையும் சீமானாக மாற்றினார். இக்கட்சியினர் பேசுவதை பார்த்தால் அது புரியும். சமூக வலைதளங்களில் இன்று தனி ஆதிக்கம் செலுத்துவது நாம் தமிழர் கட்சிதான். இளைஞர்கள் படையை அப்படியே வசீகரித்து வைத்துள்ளார் சீமான். இது சாதாரணமான பணி அல்ல.

“நீ ஓட்டுப் போடுவது எனக்காக அல்ல, உனக்காக. அவனுக்குப் போட்டு என்ன கண்டீங்க. நடுத் தெருவுல நிறுத்திருவான், அவன் வெளிநாட்டுக்குப் போய்ருவான். நீ என் கிட்ட தான் வருவே.. வந்து நிக்கணும்”.. என்று எதார்த்தமாக பேசி மக்களை வசீகரித்தவர் சீமான். அந்த அளவுக்கு அவர் கேட்கும் கேள்விகள் சிந்திக்க வைப்பதாகவே உள்ளன.

கட்சி ஆரம்பித்த காலத்தில் 1 சதவீத வாக்குகள்தான் நாம் தமிழர் கட்சிக்குக் கிடைத்தன. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இது 2 சதவீதமாக உயர்ந்தது. இன்று கிட்டத்தட்ட 5 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது. இது நிச்சயம் மிகப் பெரிய வளர்ச்சி என்பதில் சந்தேகம் இல்லை. மொத்தமாக 16 லட்சத்து 67 ஆயிரத்து 622 வாக்குகளை நாம் தமிழர் கட்சியினர் பெற்றுள்ளனர்.

இந்த வாக்குகள் அத்தனையும் உழைத்துப் பெற்றவை. இதை வைத்துக் கொண்டு சீ்மான் எப்படி முன்னேறப் போகிறார். இதை மேலும் பன்மடங்காக பெருக்கும் வகையில் அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது சுவாரஸ்யமான எதிர்பார்ப்பு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன