புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > டி லைட்டுக்கு குறி வைக்கும் மென்செஸ்டர் யுனைடெட் !
விளையாட்டு

டி லைட்டுக்கு குறி வைக்கும் மென்செஸ்டர் யுனைடெட் !

லண்டன், மே.24 –

ஹாலந்தின் தற்காப்பு ஆட்டக்காரர் மத்திஸ் டி லைட்டை வாங்க மிகப் பெரிய தொகையைக் கொடுக்க மென்செஸ்டர் யுனைடெட் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. வாரம் ஒன்றுக்கு 2 லட்சத்து 36 ஆயிரம் பவுன்ட் ஸ்டேர்லிங்கை,  டி லைட்டுக்கு சம்பளமாக வழங்க மென்செஸ்டர் யுனைடெட் ஆலோசித்துள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுகின்றன. மென்செஸ்டர் யுனைடெட்டை மீண்டும் வலுவான அணியாக உருவாக்கும் முயற்சியில் நிர்வாகி ஓலே கன்னர் சோல்ஸ்கர் ,  டி லைட்டை முக்கிய ஆட்டக்காரராக அடையாளம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. டி லைட்டை வாங்க பார்சிலோனாவும் ஆர்வம் காட்டினாலும் அதிக தொகையைக் கொடுப்பதில் மென்செஸ்டர் யுனைடெட் முன்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஹாலந்தின் ஆயக்ஸ் ஆம்ஸ்டர்ம் அணியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து அந்த அணியின் கேப்டனுமான டி லைட்டை பல முன்னணி கிளப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

டானி ஆல்வேஸ்  குறித்த செய்தி

கால்பந்து வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறும் முன்னர், இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியில் விளையாடுவதற்கு தாம் ஆவல் கொண்டுள்ளதாக பிரேசிலின் டானி ஆல்வேஸ் தெரிவித்துள்ளார். 36 வயதுடைய டானி ஆல்வேஸ் இதுவரை தமது கால்பந்து வாழ்க்கையில் 36 கிண்ணங்களை வென்றுள்ளார். தற்போது பிரான்சின் பாரிஸ் செயின் ஜெர்மைன் அணியில் விளையாடி வரும் டானி ஆல்வேஸ், இங்கிலாந்தில் கால் பதிக்க ஆசைக் கொண்டுள்ளார். எனினும் பி.எஸ்.ஜி. இன்னும் ஓராண்டுக்கு தமது ஒப்பந்தத்தை நீட்டிக்க முடிவெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். எனினும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டி சவால்மிக்கது என்பதால் அதிலும் தமது ஆற்றலை வெளிப்படுத்த எண்ணம் கொண்டுள்ளதாக டானி ஆல்வேஸ் தெரிவித்தார்.

அர்செனல் குறித்த செய்தி

இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் அடுத்த பருவத்தை முன்னிட்டு சில புதிய ஆட்டக்காரர்களைக் கொண்டு வர அர்செனல் முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக அந்த கிளப்பின் கால்பந்து பிரிவின் தலைவர் ரவுல் சன்லேஹி தெரிவித்துள்ளார். எனினும் ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அர்செனலின் பங்கேற்பை முன் வைத்தே சில ஆட்டக்காரர்கள் பேச்சுகளைத் தொடங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார். வரும் மே 29 ஆம் தேதி யூரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் அர்செனல், செல்சியை சந்திக்க விருக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் அர்செனல், நேரடியாக சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதி பெறமுடியும். இந்நிலையில் தரமான ஆட்டக்காரர்களை வாங்குவதற்கு அர்செனல் போதுமான நிதி வளத்தைக் கொண்டுள்ளதாக ரவுல் சன்லேஹி கூறினார்.

லெரோய் சானே குறித்த செய்தி

மென்செஸ்டர் சிட்டியின் இளம் தாக்குதல் ஆட்டக்காரர் லெரோய் சானேயை வாங்க ஜெர்மனியின் பாயேர்ன் மூனிக் முயற்சிகளை மேற்கொன்டுள்ளது. அந்த கிளப்பின் தலைவர்  உலி ஹொயேன்ஸ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மென்செஸ்டர் சிட்டி அணியில் 47 ஆட்டங்களில் 30 ஆட்டங்களில் மட்டுமே முதன்மை அணியில் இடம்பெற்றிருந்த லெரோய் சானே அந்த அணியை விட்டு வெளியேறப் போவதாக கூறப்படுகிறது. இதனால் லெரோய் சானேயை வாங்க பாயேர்ன் மூனிக், மென்செஸ்டர் சிட்டியுடன் முதல் கட்ட பேச்சுகளைத் தொடங்கியுள்ளது. அந்த அணியின் மூத்த ஆட்டக்காரர் ஆர்யன் ரோபேன் இந்த பருவத்துடன் விடைபெற்றிருப்பதால், Leroy Sane அவரின் இடத்தை நிரப்பபக்கூடிய தகுதியான ஆட்டக்காரர் என பாயேர்ன் மூனிக் அடையாளம் கண்டுள்ளது.

ஆர்சன் வெங்கர் குறித்த செய்தி

அர்செனல் கிளப்பின் முன்னாள் நிர்வாகி ஆர்சன் வெங்கர் வெகு விரைவில் கால்பந்து விளையாட்டுக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார். எனினும் இம்முறை கால்பந்து விளையாட்டில் தாம் எத்தகைய பொறுப்பை வகிக்கக்கூடும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என ஆர்சன் வெங்கர் தெரிவித்துள்ளார். கால்பந்து விளையாட்டின் மீது தாம் தீராத காதல் கொண்டிருப்பதால் உடனடியாக திரும்ப வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதாக ஆர்சன் வெங்கர் தெரிவித்தார். ஆனால் கால்பந்து விளையாட்டுத்துறையில் தமது பங்களிப்பு நிர்வாகி வடிவில் இருக்குமா என்பதை உறுதியாக கூற இயலாது என 69 வயதுடைய வெங்கர் தெரிவித்துள்ளார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன