முகப்பு > சமூகம் > புகை நமக்கு பகை – சுத்தம் சுகம் தரும் தென் சிரம்பானில் சமூக விழிப்புணர்வு
சமூகம்முதன்மைச் செய்திகள்

புகை நமக்கு பகை – சுத்தம் சுகம் தரும் தென் சிரம்பானில் சமூக விழிப்புணர்வு

சிரம்பான், மே 25-

தென் சிரம்பான் நகரில் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பாலர் பள்ளி சிறார்கள், பெற்றோர், சமூக நல ஆர்வலர்கள், பண்டார் சிரம்பான் செலாத்தான் தமிழ்ப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என அதிகமானோர் கலந்து கொண்டனர்.

பண்டார் சிரம்பான் செலாத்தானில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மா பாலர் பள்ளி நிதி வளர்ச்சிக்காக உணவு சந்தையும் சுற்று வட்டார மக்களிடையே மது-புகைப் பழக்கத்திற்கு எதிராகவும் வட்டார மக்களிடையே சுற்றுச் சூழல் தூய்மையை வலியுறுத்தியும் தென் சிரம்பான் சத்யசாய் பாபா இயக்கத் தலைவரும் பாலர் பள்ளி நடத்துனருமான சுராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி சார்பில் அமைச்சக சிறப்பு அதிகாரி செ.இராஜ்மோகன், ரமணா ராவ் உள்ளிட்ட வட்டார பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இங்குள்ள பொதுத் திடலில் இந்திய இளைஞர்கள் கும்பலாக அமர்ந்து அரட்டை அடிப்பதுடன் புகைப் பிடிக்கின்றனர். புகைப் பிடித்து முடித்த பின் வெண்சுருட்டு துண்டுகளையும் அட்டைப் பெட்டிகளையும் ஆங்காங்கே வீசுகின்றனர். வெளியில் இருந்து வருகின்ற இளைஞர்களும் ஒன்று சேர்ந்து மது குடிப்பதுடன் காலியான டின், போத்தல்களையும் அப்படியப்படியே கைவிட்டுச் செல்கின்றனர்.

இத்தகைய நடவடிக்கை, திடலுக்கு விளையாட வரும் சிறார்கள், மாணவர்கள், இளைப்பாற வரும் முதியோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பெரும் இடையூராக இருக்கிறது.

இத்தகைய நடவடிக்கையைத் தடுக்கவும் மது-புகைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தென் சிரம்பான் வட்டார மக்கள் தத்தம் வசிப்பிடத்தையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்து கொள்ளவும் இளைஞர்களுக்கு நன்னெறியை வலியுறுத்தவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக சுராஜ் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்காக, சத்யசாய் பாபா இயக்க இளைஞர்கள் அதிகமாக பாடுபட்டதை நன்றியுடன் நினைவு கூர்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன