முகப்பு > அரசியல் > மஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம்! செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்
அரசியல்சமூகம்

மஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம்! செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்

உலு லாங்காட் மே 26-

மலேசிய இந்திய காங்கிரஸ் உடன் ஐ பி எப் இணைந்து பணியாற்றும் என அதன் தலைவர் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன் உறுதிப்படுத்தினார். கட்சியை கலைத்துவிட்டு மலேசிய இந்திய காங்கிரஸ் உடன் இணையும் நோக்கத்தை நாங்கள் கொண்டிருக்கவில்லை.

எங்கள் கட்சியின் போராட்டம் வேறு என்பதை நினைவில் நிலைநிறுத்தி நாங்கள் தனித்து செயல்படுவோம். ஆனால் மலேசிய இந்தியர்களுக்கு தாய் கட்சியான மஇகாவுடன் இணைந்து பணியாற்றுவதில் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என்பதை அவர் நினைவுறுத்தினார்.

தேசிய முன்னணியின் உறுப்பு கட்சியான மஇகாவின் வெற்றிக்கும், தேசிய முன்னணியின் வெற்றிக்கும் ஐபிஎப் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றது. மஇகாவுடன் இணைந்து பணியாற்றுவது புதிய நடைமுறை அல்ல என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

இதனிடையே மலேசிய இந்திய காங்கிரசின் முன்னாள் தலைவர்களைக் காட்டிலும் நடப்பு தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், ஐபிஎப் கட்சியின் நிலைப்பாட்டை நன்கு உணர்ந்து இணைந்து செயலாற்றுவதற்கு இணக்கம் தெரிவித்ததையும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

ஐபிஎப் கட்சி என்றுமே கலைக்கப்படாது. தேசிய முன்னணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதன் முதன்மை உறுப்பு கட்சியாக உள்ள மலேசிய இந்திய காங்கிரஸ் உடன் இணைந்து பணியாற்றவும் நாங்கள் தயார் என அவர் சூளுரைத்தார்.

அதே வேளையில், ஐபிஎப் கட்சி மஇகாவுடன் இணைந்து செயல்படும். அதனால் அக்கட்சியில் முதன்மை பதவிகள் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நெருக்குதலை நாங்கள் வழங்க மாட்டோம்.

அம்னோ, பாஸ் ஆகிய கட்சிகள் எப்படி இணைந்து செயல் படுகிறதோ அதே போல் நாங்களும் இணைந்து செயல்பட்டு தேசிய முன்னணியின் வெற்றிக்கு வழிவகுப்போம் என உலு லாங்காட் ஐபிஎப் தலைமையகத்தில் நடந்த மத்திய செயலவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முன்னதாக கெராக்க்கன் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோ கோகிலன் பிள்ளை, மலேசிய இந்திய ஐக்கிய கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ நல்லகருப்பன் ஆகியோர் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது தமக்குப் பெரும் மகிழ்ச்சியை தருவதாக டத்தோ சம்பந்தன் குறிப்பிட்டார்.

மஇகாவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அக் கட்சியில் இணைவது தமக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது என்றார் அவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன