பாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்? – குணசீலன் கேள்வி

கோலாலம்பூர் மே 26-

நாட்டில் உள்ள 12 தனியார் பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீன மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கு அந்தந்த பல்கலைக்கழகங்கள் உபகாரச் சம்பளம் வழங்குவதாக  வெளிவந்த செய்தி இந்தியர்களை வெகுவாக பாதித்திருக்கின்றது.

மெட்ரிகுலேஷன் உட்பட உயர்கல்விக் கூடங்களில் வாய்ப்பு கிடைக்காத இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிக அளவு உயர்ந்து இருக்கும் நிலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்க வேண்டிய அவசியம் என்ன என்று மலேசிய இந்திய காங்கிரசின் மத்திய செயலவை உறுப்பினர் குணசீலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனியார் பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கு உபகாரச் சம்பளத்தை வழங்குதற்கு இணக்கம் தெரிவித்துள்ள அரசாங்கம். இந்நாட்டிலுள்ள இந்திய மாணவர்கள் எதிர்நோக்கும் உயர்கல்வி பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஏன் முனைப்புக் காட்டவில்லை,

குறிப்பாக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 4 இந்திய அமைச்சர்கள் இந்த விவகாரம் தொடர்பில் ஏன் இன்னமும் எந்த ஒரு கருத்தையும் வெளியிடவில்லை என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.

மெட்ரிகுலேஷன் வாய்ப்புகளில் இந்தியர்களுக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பது குறித்து இன்றுவரை தெளிவான தகவல் இல்லை. அதோடு பிடிபிடிஎன் கடனுதவிக்கும் விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் பல்வேறான சவால்களை எதிர் கொள்கிறார்கள்.

இப்படி பல பிரச்சினைகளை நமது சமுதாய மாணவர்கள் சந்திக்கும் சூழ்நிலையில் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் இதன் தொடர்பில் ஏன் இன்னமும் வாய் திறக்கவில்லை குணசீலன் கேள்வி எழுப்பினார்.

இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளை அரசின் பார்வைக்கு கொண்டு சென்று அதற்கு தீர்வு காண வேண்டியது தான் அமைச்சர்களின் கடமை. தங்களது அமைச்சரவையை மட்டும் சரியாக வழி நடத்தினால் போதாது. இந்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு உடனடி தீர்வு காண வேண்டியதும் அமைச்சர்களின் கடமை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

பாலஸ்தீன மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கு அரசாங்கம் உபகாரச் சம்பளம் வழங்குவது எந்த வகையில் மலேசியாவிற்கு நன்மையைக் கொண்டுவரும் என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார். இங்குள்ள மக்கள் உயர்கல்வி வாய்ப்புகள் கிடைக்காமல் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அறிந்து கொள்ளாத அரசு, வெளிநாட்டு மாணவர்கள் மீது ஏன் கரிசனம் காட்டுகிறது என அவர் கேள்வி எழுப்பினார்.

அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்திய அமைச்சர்கள் இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அமைச்சரவையில் விவாதிக்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால் இந்திய சமுதாயத்தின் அதிருப்தியை பெற்ற அமைச்சர்களாக அவர்கள் வலம் வருவார்கள் என குணசீலன் திட்டவட்டமாக கூறினார்.