செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > சுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்! – ஆலய நிர்வாகம்
சமூகம்முதன்மைச் செய்திகள்

சுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்! – ஆலய நிர்வாகம்

பெட்டாலிங் ஜெயா 26-

இங்கு உள்ள சுங்கை வே பத்தாவது மையில் கம்போங் அர்ஷாட் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண மாநில மந்திரி பெசாரும், ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ்வும் முன்வரவேண்டும் என ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டனர்.

73 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலயத்தை இவ்விடத்தை விட்டு நகர்த்த வேண்டும் என மேம்பாட்டு நிறுவனம் கங்கணம் கட்டிச் செயல்படுகின்றது. இப்பகுதியில் இந்துக்களின் அடையாளமாக விளங்கும் இவ்வாலயத்தை இவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்த ஒருபோதும் வழி விட மாட்டோம் என ஆலய நிர்வாகத்தினர் குறிப்பிட்டனர்.

ஆலயத் தலைவர் சிவகுமார்

இந்த கிராமத்தில் 39 ஆண்டுகளாக நிலை பெற்றிருந்த இவ்வாலயம் கடந்த 34 ஆண்டுகளாக தற்போதைய இடத்தில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இவ்வாலயத்தை இப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியையும் ஆலயத் தலைவர் சிவகுமார் முன்வைத்தார்.

பழைய பகுதியில் மேம்பாட்டு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதற்காக தற்போதைய இடம் ஆலயத்திற்கு வழங்கப்பட்டது. ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்திற்கு இவ்விடம் வழங்கப்பட்டபோது இந்த நிலம் அரசாங்கத்திற்கு சொந்தமாக இருந்தது. தற்போது இந்த நிலத்தை ஒரு மேம்பாட்டு நிறுவனம் கைப்பற்றிவிட்டது. அதன் காரணமாக பழமைவாய்ந்த இவ்வாலயத்தை அகற்ற வேண்டும் என்ற நடவடிக்கையை சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்னெடுப்பதாகவும் சிவகுமார் கூறினார்.

மேம்பாட்டு நிறுவனத்தின் இடைத்தரகராக ஒருவர் இந்த இடத்தைச் சுற்றி வேலி அமைக்க போவதாக மிரட்டுகிறார். இதன் தொடர்பில் தாம் போலீஸ் புகாரை மேற்கொண்டிருப்பதாகவும் சிவகுமார் கூறினார். இந்த ஆலயத்தில் அத்துமீறி நுழைந்து தடுப்பு வேலிகளை அமைத்து மற்றொரு சிபில்ட் ஆலய பிரச்சனை போல் மாறி விடும் என்பதையும் அவர் கூறினார்.

சிலாங்கூரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலயங்கள் இருந்தால் அவர்களுக்கு நிலங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் கூறியிருக்கின்றார். 73 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலயத்திற்கு நிலத்தை உறுதி செய்ய அவர் முன்வரவேண்டுமென சிவகுமார் கேட்டுக்கொண்டார்.

தற்போது ஆலயத்திற்கு என் நேரத்திலும் ஆபத்து வரலாம். தடுப்பு வேலிகளை அமைக்கும் பொழுது ஆலயத்தை தகர்க்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம். இது சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை என்பதால் மாநில மந்திரி பெசார், ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் இப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கண்டு நல்ல பதிலைத் தர வேண்டும் என சிவகுமார் கேட்டுக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன