புதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல்! இயக்குநர் கதிரின் முதல் முயற்சி

கோலாலம்பூர் மே 26-

கேவிஎம் புரடக்சன் தயாரிக்கும் புதிய வலை படம் இரவா காதல். திரைப்படம் என்பது நாம் அனைவரும் கேள்விப்பட்ட ஒரு சொல். அது என்ன வலைப் படம் என்றால், இணையதளத்தில் நேரடியாக பதிவேற்றம் செய்யப்படும் முதல் மலேசிய தமிழ் படம் என்ற பெருமையைப் பெறுகிறது இளம் இயக்குனர் ஜி வி கதிர் இயக்கும் இரவா காதல்.

திரைக்கு வராத இப்படம் வலைத்தளத்தின் மூலம் பதிவேற்றம் செய்யப்படும். பொதுமக்கள் https://www.iravaakadhal.com இணையம் வாயிலாக பணத்தை செலுத்தி இத்திரைப்படத்தை இணையத்தளத்தில் கண்டுகளிக்கலாம்.

இந்த வலை படம் மலேசிய சாதனையாளர் புத்தகத்திலும் இடம் பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. சரியான திட்டமிடலின் மூலம் 14 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, அதே நாட்களில் படத்தொகுப்பு, பாடல் காட்சிகள் படப்பிடிப்பு என அனைத்தும் நடந்து பதினைந்தாவது நாள் இந்த வலைப் படம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அதன் தயாரிப்பாளர் கே.வி.மோகன் தெரிவித்தார்.

ஜீ.வி. கதிர் இப்படத்தின் கதையை கூறுவதற்கு முன்னதாகவே, தயாரிப்பாளர் எந்த வகையிலும் கஷ்டப்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு தம்மிடம் சமர்ப்பித்த பரிந்துரை இப்படத்தை தயாரிக்க உந்துகோலாக அமைந்ததாக அவர் கூறினார்.

அதோடு அவரின் கதை மீதும் எனக்கு நம்பிக்கை இருந்தது. அவர் நிச்சயம் ஒரு சிறந்த படத்தை இயக்குவார் என்ற நம்பிக்கையின் காரணமாக தாம் இப்படத்தை தயாரிக்க முன் வந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த உலகில் தாம் அதிகம் நேசித்த தமது பெற்றோர்கள் இந்த உலகில் இல்லாத பட்சத்தில் தமது வாழ்க்கைப் பயணம் அவர்களுக்கு மகிழ்ச்சியை தரும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக ஜீவி கதிர் தமது உரையில் குறிப்பிட்டார். இது ஒரு புதிய முயற்சி. இந்த முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் மலேசிய கலைத்துறைக்கு இது புதிய மைல்கல்லாக அமையும் என்றார் அவர்.

இரவா காதல்… இது ஒரு த்ரில்லர் படம். காதலுக்கு பஞ்சமில்லாத இப்படத்தில், ரசிகர்களை கட்டிப்போடும் அம்சங்களையும் தமது திரைக்கதையில் இணைத்து இருப்பதாக குறிப்பிட்டார். இக்கதைக்கு கர்ணன் மிகச் சரியான தேர்வு என அவர் கூறினார். இத்திரைப்படத்தின் கதாநாயகிக்கு கண் மிக முக்கியம் என்பதால், கீர்த்திகாவை இதில் ஒப்பந்தம் செய்ததாகவும் அவர் கூறினார். விக்ரமும் இத்திரைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே என்ற பாடலின் மூலம் மிகப் பிரபலமான stephen சக்காரியா இசையமைக்கின்றார். ஜூலை மாதம் இதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேலைகள் நடந்து வருவதாகவும் கதிர் குறிப்பிட்டார்.

இரவா காதல் படத்தின் அறிமுக விழாவும், தலைப்பு அறிமுகமும் அண்மையில் மிக பிரமாண்டமாக நடந்தது. நாட்டின் முன்னணி கலைஞரான சி.குமரேசன் கலந்து கொண்டார். கதிரின் வேலை தம்மை மிகவும் கவர்ந்ததாக குறிப்பிட்ட அவர் கதிருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உண்டு என்பதையும் சுட்டிக்காட்டினார்.

என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமக்கு கதிர் அறிமுகமானதாக குறிப்பிட்ட அவர் தமது அடுத்த படத்தில் ஒளிப்பதிவு இயக்குனராக பணியாற்றி இருப்பதையும் தெரிவித்தார். இரவா காதல் படம் மலேசிய கலைத்துறை வரலாற்றில் புதிய முத்திரையை பதிக்க வேண்டும் என தமது எண்ணத்தையும் அவர் வெளிப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியை மலேசியாவின் முன்னணி பாடகி புனிதா ராஜா சிறப்பாக வழிநடத்தினார்.