புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > துன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது! – கேசவன் வலியுறுத்து
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

துன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது! – கேசவன் வலியுறுத்து

கோலாலம்பூர் மே 26-

தலைநகரில் முதன்மை இடமான பிரிக்பீல்ட்ஸ் இல் உள்ள துன் சம்பந்தன் சாலைக்கு மாற்றுப் பெயர் வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை மஇகா இளைஞர் பிரிவின் பொருளாளர் கேசவன் வன்மையாகச் சாடினார்.

மலேசிய இந்திய காங்கிரசின் மூத்த தலைவரான துன் சம்பந்தன் மலேசிய அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத நபர். அவரின் பெருமைகளை அடுத்த சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பிரிக்பீல்ட்ஸில் உள்ள சாலைக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. எந்த காரணத்தை முன்வைத்தும் அதை மாற்றும் நடவடிக்கையை நடப்பு அரசாங்கம் முன்னெடுக்க கூடாது என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய இந்திய காங்கிரசின் துன் சம்பந்தன் இன்றி வரலாற்றுப் பதிவுகளை என்றுமே பதிவு செய்ய முடியாது. குறிப்பாக மலேசியாவை பொறுத்தவரையிலும் மூத்த முதன்மை தலைவர்களில் முதல் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் துன் சம்பந்தன்.

அப்போதைய காலகட்டத்தில் மலேசிய இந்தியர்கள் தோட்டத் துண்டாடல் காரணமாக இந்தியாவிற்கு திரும்பக் கூடிய சூழ்நிலை எழுந்தபோது, தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தை தோற்றுவித்து தோட்டங்களை வாங்கி இந்தியர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்த தலைவர் துன் சம்பந்தன்.

தமது இறுதி மூச்சு உள்ளவரை இந்திய சமுதாயத்தின் ஏற்றமிகு எதிர்காலத்தை மட்டுமே சிந்தித்த அந்த தலைவனின் பெயரை சாலையில் இருந்து நீக்கி மற்றும் ஒரு பெயரை நியமிப்பது எந்த வகையிலும் நியாயம் ஆகாது என்பதை கேசவன் சுட்டிக்காட்டினார்.

தேசிய முன்னணியின் முதன்மை தலைவர்களின் பெயரை கொண்ட சாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டும் என்பதற்கு நடப்பு அரசாங்கம் எடுத்திருக்கும் முதல் முயற்சியாக இதை தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கு நாம் வழி விட்டால் இனி வரும் காலங்களில் அனைத்து பெயர்களும் மாற்றப்படும் சாத்தியம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். துன் சம்பந்தனின் பெயர் பிரிக்பீல்ட்ஸ் சாலையில் தொடர்ந்து நிலைபெற மலேசிய இந்திய காங்கிரஸ் தொடர்ந்து பாடுபடும் என அவர் திட்டவட்டமாக கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன