முகப்பு > அரசியல் > யாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை! இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

யாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை! இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர் மே 26-

மலேசிய இந்திய காங்கிரஸ் என்ன செய்தது என்ற கேள்விக்கு பதில் அளிப்பதற்கு அனைத்து உறுப்பினர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அதன் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

யாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. இந்த சமுதாயத்திற்காகவும் நாட்டிற்காகவும் மலேசிய இந்திய காங்கிரஸ் எம்மாதிரியான நடவடிக்கைகளை முன்னெடுத்தது என்பதை பட்டியலிடுவது ஒரு நூல் போதாது என அவர் குறிப்பிட்டார்.

மலேசிய இந்திய காங்கிரசின் வரலாற்றுச் சாதனைகளை அறிந்திருக்காதவர்கள் தான் கேள்வி எழுப்புபவர்கள் மத்தியில் அமைதியாக இருக்கின்றார்கள். தோட்டத் துண்டாடல் பிரச்சனை எழுந்தது முதல் இப்போது இருக்கின்ற பிரச்சனை வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் மலேசிய இந்தியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்ட ஒரே கட்சி மலேசிய இந்திய காங்கிரஸ்.

கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு என அனைத்திலும் நம் எம்மாதிரியான நடவடிக்கைகளை முன்னெடுத்தோம் என்பதை கட்சியின் உறுப்பினர்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அந்த ஆற்றலை நீங்கள் பெற்று விட்டால் யார் கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்ல முடியும் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

வெள்ளிக்கிழமை இரவு மலேசிய இந்திய காங்கிரசின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்திருந்த சம்யுக்தா நூல் அறிமுக விழாவையும் பெண்ணே உனக்கு நீயே எனும் கருத்தரங்கையும் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மலேசிய இந்திய காங்கிரஸ் புதிய சட்ட விதிமுறைகளை கொண்டு வருகின்றது. இனி ஒவ்வொரு கிளைக்கும் 60 பேர் மட்டுமே உறுப்பினர்கள். 60 பேரை வழி நடத்துவது என்பது எளிதான காரியம். அதோடு அந்த 60 பேருக்குள் ஒரு நெருக்கம் எப்பொழுதும் இருக்கும் என அவர் குறிப்பிட்டார். இனி செயல்படாத உறுப்பினர்கள் கட்சிக்கு தேவையில்லை.

இனி நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு ஒரே கிளையில் செயல்படுவதற்கான நடவடிக்கையை நம் கை விடுகின்றோம். 60 பேர் இருந்தால் ஒரு புதிய கிளையை உருவாக்கலாம். 60 பேருக்கு மேல் இருக்கும் கிளைகள் தனித்தனியாக பிரிக்க ப்படும் என்ற தகவலையும் விக்னேஸ்வரன் வெளியிட்டார்.

நமது கட்சி ஒரு மாற்றத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. அந்தப் பயணத்தில் பெண்களின் பங்கு அளப்பரியது. அரசாங்கத்தில் நாம் இல்லாத போதும் இந்த கட்சிக்காக முன் நிற்கும் மகளிர்களை தாம் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒன்றுபட்டு செயல்படுங்கள் நல்ல திட்டத்தை கொண்டு வாருங்கள் அதற்கு எப்போதும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என அவர் உறுதி அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மலேசிய இந்திய காங்கிரசின் மகளிர் பிரிவு தலைவி உஷாநந்தினி, டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுடன் பணியாற்றுவது, துன் சாமிவேலு உடன் பணியாற்றுவதற்கு சமமாக இருப்பதாக குறிப்பிட்டார். வேலை செய்பவர்களுக்கு மட்டுமே கட்சியில் இடம் என்பதில் அவர் உறுதியாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சம்யுக்தா நூல் மலேசிய இந்திய காங்கிரசின் மகளிர் பிரிவு நடவடிக்கைகளை தாங்கி மலரும் இதழாக இருக்கும். அதோடு அவர்களுக்கு தேவையான பல விளக்கங்களும் அதில் இடம்பெற்றிருக்கும் என உஷா நந்தினி குறிப்பிட்டார். இந்த கருத்தரங்கில் நாடு தழுவிய நிலையில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன