புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > துன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

துன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா

பெட்டாலிங் ஜெயா மே 27

   மலேசியாவின் முதன்மை இடமாக இடமாக இருக்கும் பிரிக்பீல்ட்ஸ்சில் அமைந்துள்ள துன் சம்பந்தன் சாலையின் பெயரை நீக்குவது மிகத் தவறான நடவடிக்கை என மலேசிய இந்திய காங்கிரசின் சிலாங்கூர் மாநில தலைவர் ராஜா வலியுறுத்தினார்.

   அடையாளத்தை மாற்றி அமைப்பது மிக தவறானது. கட்சி பேதங்களை கடந்து மலேசியர்களுக்காக பாடுபட்ட உன்னத தலைவர் துன் சம்பந்தன். அவரின் பெயரை நீக்கிவிட்டு வேறு பெயரை வைப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கின்றார்.

    முன்னதாக அச்சாலையை ஜாலான் ஹார்மொனி என பெயர் மாற்றம் செய்ய இஸ்லாமிய விவகார அமைச்சர் முஜாஹிட் யூசோப் ராவா பரிந்துரை செய்ததை அடுத்து அவர் மேற்கண்ட கருத்தினை தெரிவித்துள்ளார்.

 மலேசிய இந்திய காங்கிரசின் மூத்த தலைவராக துன் சம்பந்தன் திகழ்ந்த போதும் அவர் மலேசியர்களின் தலைவர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். நாடு சுதந்திரம் அடைந்தபோது அரசியல் தலைவர்களுடன் முதன்மை வரிசையை அலங்கரித்தவர் துன் சம்பந்தன்.

 இந்திய சமுதாயத்தின் ஏற்றமிகு எதிர்காலத்திற்கு வித்திட்ட இதே தலைவர் மலேசியாவின் அடையாளமாகத் திகழ்கின்றார். அவரை பெருமைப்படுத்தும் வகையில் பிரிக்பீல்ட்ஸ்சில் உள்ள சாலைக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனிடையே வரலாற்று சான்றுகளை அழிக்கும் நடவடிக்கைகளை நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என்ற கோரிக்கையையும் எம்பி ராஜா முன் வைத்துள்ளார்.

  ஆட்சி அதிகாரத்தை நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் கைப்பற்றி ஓராண்டுக்கு மேல் ஆகிய போதும் எந்த ஆக்ககரமான செயல்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. தற்போது இனவாதம் என்பது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதனை சீரிய முறையில் களைவதற்கும் இந்த அரசு நடவடிக்கைகளை முன்னெடுக்க வில்லை.
இந்தியர்களின் இன உணர்வைத் தூண்டும் இம்மாதிரியான செயல் திட்டங்களை உடனடியாக கைவிடுவதுதான் ஆக்ககரமான சிந்தனை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மலேசியர்கள் ஒற்றுமையாக இருக்கின்றார்கள். அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சில அமைச்சர்களின் செயல்திட்டங்கள் அந்த நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைகின்றது.
சாலையின் பெயரை மாற்றுவதாக அமைச்சர் கூறியிருப்பது பரிந்துரையையாகவே முடிந்துவிட வேண்டும். அதை செயல்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்றால் மலேசிய இந்திய காங்கிரஸ் தொடர்ந்து குரல் எழுப்பும் என எம்பி ராஜா திட்டவட்டமாக கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன