புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > உறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் ! – கேகேபி இலக்கு
சமூகம்முதன்மைச் செய்திகள்

உறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் ! – கேகேபி இலக்கு

கோலாலம்பூர், மே 27-

ஒரு கழகத்தை கட்டடம் மூலம் உயர்ந்ததாகக் காட்டக்கூடாது. உறுப்பினர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி மேம்படுத்தியிருக்கிறார்கள் என்பதே முக்கியம். இதுவே தொழிலாளர் கூட்டுறவு நாணயச் சங்கத்தின்(கேகேபி) தலையாய நோக்கம் என்று கூறப்பட்டது.

இச்சங்கத்தின் சொத்துகள் தற்போது பொது சொத்துக்களாகவே உள்ளன. இவற்றின் வழி வரையறுக்கப்பட்ட சில முதலீடுகளை மட்டுமே செய்ய முடியும். ஆகையால், பயன்பாட்டிற்கு உள்ள சில கட்டிடங்களை வைத்துக் கொண்டு மற்றவற்றை விற்கும்போது போனஸ் பங்குகள் கொடுக்க வேண்டிய நிலை உருவாகும். இது உறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு வழி வகுக்கும் என்று இச்சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் ஏ. எஸ். ஆறுமுகம் சாமிநாதன் தெரிவித்தார்.

“முன்பு கேகேபி கட்டிடத்திற்கு வருவதனால் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்குவார்கள். இதன் காரணமாகவே ஜாலான் ஈப்போவில் ஆறு மாடி கட்டிடத்தை நாங்கள் வாங்கினோம். சங்கத்தின் அடையாளச் சின்னமாக இக்கட்டிடத்தில் சங்கம் தனது நடவடிக்கைகளை சுமூகமான முறையில் மேற்கொண்டு வருகிறது “என்று இங்கு முத்தியாரா வர்த்தக வளாக மண்டபத்தில் நடைபெற்ற சங்கத்தின் 39 ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் தலைமையுரை ஆற்றுகையில் குறிப்பிட்டார்.

“சமூக, பொருளாதார ரீதியில் மக்களை ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு மேம்படுத்த வேண்டும். மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். இதனைக் கூட்டாகச் செய்து சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான பல்வேறு ஆக்கப்பூர்வ திட்டங்களில் சங்கம் ஈடுபட்டு வருகிறது ” என்று அவர் மேலும் சொன்னார்.

சமூக வளர்ச்சித் திட்டங்களில் ஒன்றாக வறிய நிலையில் உள்ள பி 20 பிரிவினரை அடையாளம் கண்டு அவர்களை சிறு வியாபாரம் செய்ய ஊக்குவிக்க சங்கம் திட்டமிட்டுள்ளது. உணவுக்காகச் சிரமப்படுவோர், பிள்ளைகளின் படிப்பு தொடர முடியாத நிலையில் இருப்பவர்கள், தனித்து வாழும் தாய்மார்கள் போன்றோரை அங்கத்தினர்களாகச் சேர்த்து கடனுதவி வழி அவர்களின் வாழ்க்கை நிலையை மாற்ற சங்கம் உரிய முயற்சிகளை மேற்கொள்ளும் என்றார்.

இதனிடையே, கடந்தாண்டுக்கான உறுப்பினர்களின் சேமிப்புக்கு 10 விழுக்காடு லாப ஈவு வழங்கப்படும் என்று இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.  சங்கத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்ட வேளையில் அதிக தொகையை வசூல் செய்த மூவர் லங்காவி செல்லும் வாய்ப்பைப் பெற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன