அறவாரியம் வழி ஆன்மீகம்!! ஸ்தாப்பாக் ஶ்ரீ ஐயனாரீஸ்வரர் ஆலயம் முனைப்பு

கோலாலம்பூர் மே 29-

 ஆலயங்கள் சமூக சேவை மையங்களாக மாறும் நிலையில் சமுதாயத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஸ்தாப்பாக் ஶ்ரீ ஐயனாரீஸ்வரர் ஆலயம் துணைத் தலைவர் டத்தோ பெருமாள் நம்பிக்கை தெரிவித்தார்.

  அதனை கருத்தில் கொண்டு ஸ்தாப்பாக் ஶ்ரீ ஐயனாரீஸ்வரர் ஆலயம் அறவாரியத்தை தோற்றுவித்து அதன் வழி சமுதாய சேவையில் ஈடுபடுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

  முன்னதாக தலைநகர் ஸ்தாப்பாக்கில் அமைந்துள்ள அருள்மிகு  ஶ்ரீ ஐயனாரீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் ஜூன் 6 ஆம் தேதி காலை 9 மணி அளவில் நடைபெற இருப்பதாக அவர் கூறினார். இதன் தொடர்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஆலய நிர்வாகம் அறவாரியத்தை தோற்றுவித்து அதன் வழி சமுதாய சேவையில் ஈடுபடுவதற்கான செயல் திட்டங்களை அடையாளம் கண்டு வருவதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

   12 லட்சம் வெள்ளி செலவில் இவ்வாலயத்தின் திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளன. குறிப்பாக பேரு குறைந்தவர்களும் இந்த ஆலயத்திற்கு வரவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கான வழிப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது.  புதிதாக ஆஞ்சநேயர் சன்னதி, கால பைரவர் சன்னதி என இரு சன்னதிகள்  எழுப்பப்பட்டு உள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

ஸ்தாப்பாக் ஶ்ரீ ஐயனாரீஸ்வரர் ஆலயம்

 ஆலயத்தின் பெயரில் தொடங்கப்படும் இந்த அறவாரியத்தில் முதல் கட்டமாக ஒரு லட்சம் வெள்ளியை திரட்டுவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சமய நிகழ்ச்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அதேவேளையில் கல்வி, கடன் உதவி, உபகாரச் சம்பளம் போன்றவற்றை வழங்குவதற்கும் ஆலயம் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

  மலேசியாவில் பழமை வாய்ந்த ஆலயங்களில் ஸ்தாப்பாக் ஶ்ரீ ஐயனாரீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலயத்தில் 1914 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதற்கான  சான்றுகள் உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

  பின்னர் 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்கான நிலத்தை தொழிலதிபர் வின்சென்ட் தான் பெற்று தந்தார். கடந்த தேசிய முன்னணி அரசாங்கம் இந்த ஆலயத்தின் மேம்பாட்டிற்காக 3 லட்சம் வெள்ளியை நன்கொடையாக வழங்கியதாக அவர் கூறினார். கடந்த ஆண்டு நடந்த தேர்தல் சமயத்தில் மேலும் 20 ஆயிரம் வெள்ளியை பிரதமர் துறை வழங்கியதாகவும் டத்தோ பெருமாள் குறிப்பிட்டார்.

   அதேபோல் தற்போதைய நடப்பு அரசாங்கத்தைச் சார்ந்த இப்பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் 20 ஆயிரம் வெள்ளி நன்கொடை வழங்கினார். இவர்களின் துணையோடு இவ்வாலயம் தற்போது புதுப்பொலிவுடன் காட்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

 மகா கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் ஆலய சுற்றுவட்டாரத்தில் கடைகளை அமைத்துக் கொள்வதற்கு உள்ளூர் வர்த்தகர்களுக்கு இலவசமாக இடம் வழங்கப்படுகிறது என்ற தகவலையும் அவர் வெளியிட்டார். இந்திய வர்த்தகர்கள் பலன் அடைய வேண்டும் என்பதற்காக சுற்றுவட்டாரத்தில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு கடைகளில் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

    இந்த கும்பாபிஷேகத்தில் 3000த்திற்கு அதிகமான பொதுமக்கள் திரள்வார்கள் என ஆலய நிர்வாகம் நம்புகின்றது. சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக இதில் கலந்துகொண்டு இறைவனின் அருளைப் பெற வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.