அமெரிக்காவின் பிரபலமான ராணுவ கல்லூரிகளில் பயில மதேசன் வர்மா உட்பட மூவருக்கு வாய்ப்பு

கோலாலம்பூர் மே 30-

மதேசன் வர்மா சுப்பிரமணியம் உட்பட மூன்று மலேசியர்கள் அமெரிக்காவிலுள்ள ராணுவ கல்லூரிகளில் உயர்கல்வியை மேற்கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர். வேஸ்ட் பொய்ன்ட் என்னுமிடத்திலுள்ள ராணுவக் கல்லூரியில் பயில்வதற்கு மதேசன் வர்மா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.

மேரிலன்டிலுள்ள கடற்படை கல்லூரியில் முகமட் அனிக் ஹில்மான் மற்றும் கிரேஸ் சியன் எர்ன் ஹுய் கொலோராடோவிலுள்ள விமானப்படை கல்லூரியில் தங்களது உயர் கல்வியை மேற்கொள்வார்கள். அந்த மூவரும் இவ்வாண்டு மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்தில் தங்களது கல்வியை முடித்தனர்.

அம்மூவரும் அமெரிக்க ராணுவ கல்லூரிகளில் இணைவதற்கு முன் திடமான உடல்நல உறுதிக்கான பயிற்சி மற்றும் பல்வேறு நிர்வாக நடைமுறைகளை செயல் நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள் என மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதர் கமலா ஸிரின் லக்டீர் தெரி வித்தார்.

19 வயதுடைய இந்த மூவரும் அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு செல்வார்கள். ஒவ்வொரு ராணுவ கல்லூரிகளிலும் இணைவதற்கு 71 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஒவ்வொரு கல்லூரியிலும் 15 அனைத்துலக மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டதாக கமலா கூறினார்.

அமெரிக்க ராணுவ கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ளப்பட்ட மூன்று மலேசியர்களும் தங்களது நியமனக்கடிதங்களை கமலாவிடம் பெற்றுக்கொண்டனர் இந்த நிகழ்வில் அந்த மூவரின் நண்பர்களும் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். 1971ஆம் ஆண்டு முதல் அமெரிக்க ராணுவ கல்லூரிகளின் முப்பது மலேசியர்கள் மட்டுமே தங்களது பயிற்சியை முடித்து பட்டம் பெற்றுள்ளனர்.