வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மஸ்லீயின் இனவாத அறிக்கையை துன் மகாதீர் ஆதரிப்பதா? -கெராக்கான் கேள்வி
அரசியல்முதன்மைச் செய்திகள்

மஸ்லீயின் இனவாத அறிக்கையை துன் மகாதீர் ஆதரிப்பதா? -கெராக்கான் கேள்வி

கோலாலம்பூர், மே 30-

இனவாத தன்மையிலான அறிக்கையை வெளியிட்ட கல்வி அமைச்சர் மஸ்லீ மாலேக்கைத் தற்காத்து பேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் நடவடிக்கை தமக்கு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டாக்டர்  டோமினிக் லாவ்  ஹோ சாய் கூறினார்.

கடந்தாண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிட்ட சுதந்திர  தின செய்தியில் பக்காத்தான் அரசாங்கம் அனைவரையும் இனபேதமின்றி சரிசமமாக  நடத்தும் என்று மகாதீர் உறுதியளித்தார். ஆயினும், இன்றைய நிலையில் கோட்டா முறையைப் பின்பற்றும்  மெட்ரிகுலேஷன் திட்டம் அகற்றப்படவோ அல்லது  திருத்தப்படவோ இல்லை. இது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும் என்று அவர் சாடினார்.

“முந்தைய அரசாங்கத்தின் அடக்குமுறை நிர்வாகத்தை மக்கள் புறக்கணித்துள்ளனர். இது நாட்டிற்கு கிடைத்த இரண்டாவது சுதந்திரமாகும் என்று கடந்தாண்டு சுதிந்திர தின செய்தியில் துன் டாக்டர் மகாதீர் கூறியது   எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

அதோடு மலேசியர்கள் அனைவரும் இன, சமய பேதங்களின்றி நியாயமாகவும் சமமாகவும் நடத்தப்படுவர் என்று பக்காத்தான் அரசாங்கம் உறுதியளித்தது. ஆனால் தற்போது 90:10 என்ற மெட் ரிகுலேஷன் கோட்டா முறை தொடரும் வேளையில் இசி எல் ஆர் திட்டத்தில் பூமிபுத்ராக்களுக்கான கோட்டாவும் தொடர்கிறது. இதில் எங்கே நியாயம் இருக்கிறது என்று டோமினிக் வினவினார்.

மஸ்லீயின் அறிக்கையை மகாதீர் தற்காத்து பேசியது பூமிபுத்ராக்களின் ஆதரவைப்பெறுவதற்காகவே என்ற போதிலும் இது பூமிபுத்ரா அல்லாதவர்களைச் சமாதானப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதாகும். அந்த அறிக்கை பூமிபுத்ரா அல்லாதவர்களின் மனதை இரண்டாவது முறையாகக் காயப்படுத்தியுள்ளது. மேலும், இன அரசியல் தடத்தில் பக்காத்தான் கூட்டணி நகர்வதை நன்கு புலப்படுத்தியுள்ளது என்றும் அவர் சொன்னார்.

“இன்று பிரதமர் மகாதீர் தெருவில் நடந்து சென்று பூமிபுத்ரா அல்லாதவர்களின் மன உணர்வு குறித்து கேட்டால், அவர்களில் ஒருவர் கூட மஸ்லீ ஓர் இனவாதி கிடையாது என்று கூற மாட்டார்” என்றார் டோமினிக் லாவ்.

ஆளும் கூட்டணி என்ற முறையில் பக்காத்தான் அரசாங்கம், பூமிபுத்ரா அல்லாதவர்களின் அதிருப்தியை ஒரு பொருட்டாகக் கருதாமல் நியாயமற்ற கோட்டா முறையைத்  தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டே போகலாம். ஆனால், பூமிபுத்ரா அல்லாதவர்கள் பக்காத்தான் கூட்டணியை இனி ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள் என்ற பொதுவான கருத்துக் கணிப்பை அது நிச்சயம் மாற்ற முடியாது. இந்தத் தரப்பினரின் ஆதரவு இல்லாமல் பக்காத்தான் தனது ஆட்சியைத் தொடர முடியுமா என்று டோமினிக் லாவ் வினவினார்.

தொன்று தொட்டு அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று கோரி வரும் கெராக்கான், ஒரு சுதந்திர கட்சி என்ற முறையில் மக்கள் அனைவரையும் மலேசிய மைந்தர்கள் என்ற கோணத்திலேயே பார்க்கிறது. ஆகையால், அனைவரும் சமமாக நடத்தப்பட்டால் மட்டுமே நாட்டில் ஒற்றுமை நிலைநாட்டப்பட முடியும் என்று டோமினிக் லாவ் ஆணித்தரமாகக் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன