புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > யூரோப்பா லீக் – அர்செனலின் கனவு கலைந்தது ; மீண்டும் கிண்ணத்தைக் கைப்பற்றியது செல்சி !
விளையாட்டு

யூரோப்பா லீக் – அர்செனலின் கனவு கலைந்தது ; மீண்டும் கிண்ணத்தைக் கைப்பற்றியது செல்சி !

பாக்கு, மே.30- 

2018/19 ஆம் பருவத்துக்கான யூரோப்பா லீக் கிண்ணத்தை செல்சி கைப்பற்றியுள்ளது. புதன்கிழமை கசக்ஸ்தானின் பாக்கு நகரில் நடந்த இறுதி ஆட்டத்தில் செல்சி, இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியைச் சேர்ந்த மற்றொரு கிளப்பான அர்செனலை 4 – 1 என்ற கோல்களில் வீழ்த்தியது.

முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்த வேளையில் இரண்டாம் பாதி ஆட்டத்தின் 23 நிமிடங்களில் செல்சி அடித்த நான்கு கோல்களினால் அர்செனல் நிலைக்குலைந்துப் போனது. 49 ஆவது நிமிடத்தில் ஒலிவர் ஜீரோட் முதல் கோலைப் போட்ட வேளையில் 56 ஆவது நிமிடத்தில் பெட்ரோ இரண்டாவது கோலைப் போட்டு செல்சியின் நிலையை வலுவாக்கினார்.

65 ஆவது நிமிடத்தில் கிடைத்த பினால்டியின் வழி, எடின் ஹசார்ட் செல்சியின் மூன்றாவது கோலைப் போட்டார். எனினும் மூன்று நிமிடங்களுக்குப் பின்னர் அலெக்ஸ் இவோபி போட்ட கோலின் மூலம் அர்செனல் மீண்டும் ஆட்டத்துக்குள் நுழைய முற்பட்டது. 72 ஆவது நிமிடத்தில் ஹசார்ட் அடித்த கோல் அர்செனலின் கனவை கலைத்தது.

2012 ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்ற செல்சி, 2013 ஆம் ஆண்டில் யூரோப்பா லீக் கிண்ணத்தை வென்றது, தற்போது மீண்டும் யூரோப்பா லீக் கிண்ணத்தை வென்று சாதனைப் படைத்துள்ளது. யூரோப்பா லீக் கிண்ணத்தை வெல்வதின் மூலம் மீண்டும் சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதிப் பெற எண்ணம் கொண்டிருந்த அர்செனலின் கனவு ஈடேறவில்லை. அதேவேளையில் செல்சிக்கு கிடைத்த வெற்றியின் மூலம் பிரான்சின் லியோன் சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன