புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > நஜீப் – ஸாஹிட்டை நீக்குவதற்கு அம்னோ சட்ட விதிகளில் திருத்தம்!
அரசியல்முதன்மைச் செய்திகள்

நஜீப் – ஸாஹிட்டை நீக்குவதற்கு அம்னோ சட்ட விதிகளில் திருத்தம்!

கோலாலம்பூர் மே 31-

டத்தோஸ்ரீ நஜீப் மற்றும் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடியை அம்னோவிலிருந்து நீக்குவதற்காக கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் ஒன்றை செய்வதற்கான முயற்சியை அம்னோவின் துனணத் தலைவரான டத்தோஸ்ரீ முகமட் ஹசான் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியின் சட்ட விதிகளில் மாற்றத்தை கொண்டு வரும் நடவடிக்கையை கண்காணிக்கும்படி அம்னோவின் உதவித் தலைவர் முகமட் காலிட் நோர்டினை முகமட் ஹசான் பணித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் சிறப்புக் கூட்டத்தில் கட்சியின் சட்ட விதியில் திருத்தம் செய்வதற்கான முயற்சியை அம்னோ மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இந்த முயற்சி வெற்றி அடைந்தால் அம்னோவின் தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடி முன்னாள் தலைவர் நஜீப் ரசாக் ஆகியோர் இயல்பாகவே தங்களது பதவியிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

எனினும் கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல .சிறப்பு பொதுப்பேரவையில் கலந்துகொள்ளும் பேராளர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு இருந்தால் மட்டுமே கட்சி விதிமுறையில் திருத்தம் செய்ய முடியும் . சட்ட விதிகளில் திருத்தம் செய்யும் ஆலோசனை முன்மொழியப்பட்டிருப்பதை கட்சியின் சில தலைவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தத் திருத்திற்கு உறுப்பினர்களின் ஆதரவை எப்படி பெறுவார்கள் என்பது குறித்து தாம் ஆவலோடு பார்க்க விரும்புவதாக ஜொகூர் அம்னோ துணைத் தலைவர் நூர் ஜஸ்லான் முகமட்டை மேற்கோள் காட்டி சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன . கட்சிக்கு உள்ளேயே மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு எப்படி இருக்கும் என்பது இப்போதைக்கு தெரியவில்லை.

கட்சியில் இப்போது பலர் தாங்கள் தான் பாஸ் என்று கூறிக் கொள்வதாக பெயர் குறிப்பிடாத விரும்பாத அம்னோ தலைவர் ஒருவர் தெரிவித்தார். ஸாஹிட் தற்போது விடுமுறையில் இருந்து வருவதால் இடைக்கால தலைவராக முகமட் ஹசான் இருந்து வருகிறார்.

அம்னோ சட்ட விதிகளை திருத்தம் செய்வதற்கு சிறப்பு பேராளர் கூட்டம் நடைபெறும் என கடந்த மாதம் அவர் அறிவித்திருந்தார். நவம்பர் 13ம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் அம்னோ பொதுப்பேரவையின் போது சிறப்புக் கூட்டம் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்றம், நம்பிக்கை மோசடி மற்றும் லஞ்ச ஊழல் உட்பட 47 குற்றச்சாட்டுகளை ஸாஹிட் எதிர்நோக்கியுள்ளார்.அம்னோவின் தலைவர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும் என்ற நெருக்குதலும் கட்சிக்குள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் 1எம்டிபி தொடர்பாக பல்வேறு வழக்கு விசாரணைகளை நஜீப் எதிர் நோக்கியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன