ஓப்ஸ் செலாமாட்; முதல் இரு நாட்களில் 35 மரணங்கள்

0
11

கோலாலம்பூர் ஜூன் 1

நோன்புப் பெருநாளை முன்னிட்டு   சாலை பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்ட போதிலும் முதல் இரு நாட்களில் நிகழ்ந்த விபத்துக்களில் 35 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஓப்ஸ் செலமாட் பாதுகாப்பு இயக்கத்தை முன்னிட்டு  போக்குவரத்து போலீசார் மற்றும் சாலை போக்குவரத்துத்துறை அதிகாரிகள்  வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் கடந்த இரு நாட்களில் சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு 14,193 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் வேகக்கட்டுப்பாட்டை மீறியதற்காக சம்மன்களை பெற்றுள்ளதாக புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் இயக்குனர் டத்தோ அஸிஸ்மான் அலியாஸ் கூறினார்.

வாகன ஓட்டிகளின் அலட்சியமான மற்றும் பொறுப்பற்ற மனப்போக்கும்  விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணம் என அவர் சொன்னார். எனினும் இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மரணத்தை ஏற்படுத்தக்கூடிய சாலை விபத்துகளை குறைப்பது தான் எங்களது முக்கிய இலக்காகும். பெருநாள் காலங்களில் விபத்துகள் அதிகரிக்கும் போக்கு தொடர்வதை நாங்கள் விரும்பவில்லை என அஸிஸ்மான் தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் நெடுஞ்சாலைகளில் முக்கியமான இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமாகும் .

போலீசார் வாகன ஓட்டிகளை தண்டிக்க விரும்பவில்லை. .ஆனால் சாலை பாதுகாப்பு காலகட்டத்தின் போது சாலை குற்றங்களைப் புரியும் வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு கழிவு இன்றி  300 வெள்ளி அபராத தொகைக்காக சம்மன்கள் விநியோகிக்கப்படும் என அஸிஸ்மான்  கூறினார்.

இதனிடையே  எத்தகைய  சூழ்நிலை ஏற்பட்டாலும் அவசர தடங்களை பயன்படுத்தக்கூடாது என சாலையை பயன்படுத்துவோருக்கு நினைவுறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் மோசமாக இருந்தாலும் சுமுகமானபோக்குவரத்தை உறுதிப்படுத்த போலீசார் விவேகமான அணுகுமுறையை மேற்கொள்வார்கள் என்று அஸிஸ்மான் தெரிவித்தார்.