ஷா ஆலாம்,  ஜுன் 1

பிரபல வரலாற்றாசிரியரும், நிறைநிலை பேராசிரியருமான  டான்ஸ்ரீ கூ கே கிம் அவர்களின் இறுதிச் சடங்கில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் அறிமுக நெஞ்சங்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஷா அலாமிலுள்ள நிர்வாண நினைவு பூங்காவில் அவரது நல்லுடல் தகனம் செய்யப்பட்டது. இருதய செயலிழப்பின் காரணமாக 82 வயது வயதுடைய பேராசிரியர் கோ புதன்கிழமையன்று மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் காலமானார்.

சுங்கைபீசி  நிர்வாணா  நினைவு மையத்தில் வைக்கப்பட்டிருந்த பேராசிரியர் கூ அவர்களின் நல்லுடலுக்கு  கடந்த இரண்டு நாட்களாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர். பேராசிரியர் கோ வின்  துணைவியார் புவான்ஸ்ரீ ரதி கூ, அவரது புதல்வர்களான எடின், மவின், ரூபின் ஆகியோரின் கண்ணீர் அஞ்சலி யோடு  இறுதிச் சடங்கு நடைபெற்றது.

மலேசியாவில் வரலாற்றுத் தகவல்களை மிகவும் துல்லியமாகவும் ஆதாரங்களுடன் வழங்கிவந்த வரலாற்று ஆசிரியராக பேராசிரியர் கூ திகழ்ந்தார். மலாயா பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகாலம் வரலாற்று பேராசிரியராக பணியாற்றிய அவர் நாட்டில்  ருக்குன் நெகாரா கோட்பாடு வடிவமைப்பதற்கும் பெரும் பங்காற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.1969ஆம் ஆண்டு மே 13 கலவரத்திற்குப் பின்னர் மக்களிடையே ஒற்றுமையும் சகோதர உணர்வையும் ஏற்படுத்தும் நோக்கத்தில்  ருக்குன் நெகாரா கோட்பாடு உருவாக்கப்பட்டு 1970ஆம் ஆண்டு சுதந்திர தினத்தில் அது தேசிய தத்துவ கோட்பாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.

காலஞ்சென்ற டான்ஸ்ரீ கூ கே கிம் இடைநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கான வரலாற்றுப் புத்தகங்களையும் எழுதியுள்ளார். தவிர வரலாறு மற்றும் விளையாட்டுத் துறை தொடர்பான கருத்துக்களையும் அவர் தொடர்ந்து வழங்கி வந்துள்ளார்.