கோலாலம்பூர், ஜூன் 2-

மாற்று அந்நியத் தொழிலாளர் கொள்கையை அமல்படுத்தி இருக்கும் பிரதமர்  துன் டாக்டர்  மகாதீர் முகமது விற்கு   இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனம்  (FICCIM)  மற்றும் கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சங்கத்தின்  தலைவர் டத்தோ ராமநாதன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

வரும் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி இக்கொள்கை அமல்படுத்தப்படும் என்ற செய்தி இந்திய வர்த்தகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்பதோடு அந்நியத் தொழிலாளர்கள் இல்லாமல் முடங்கிக் கிடக்கும் வியாபாரம் மீண்டும் புத்துயிர் பெறும் என்றார்.

புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் இந்திய வர்த்தக மற்றும் தொழிலியல் சம்மேளத்தின் தலைவரும் கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சம்மேளத்தின் இணை ஸ்தாபகருமான டத்தோ ராமநாதன் மலேசிய உற்பத்தி  சம்மேளனம் (FMM), மலேசிய முதலாளிகள் சம்மேளனம் (MEF), சிறு மற்றும் நடுத்தர வர்த்தக சங்கம்  (SME),  உள்ளிட்ட 23 சங்கங்கள் அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறையினால் எதிர்நோக்கி வந்த பிரச்சினைகள், அதனால் ஏற்பட்ட தாக்கம், இழப்புகள் ஆகியவற்றை அரசாங்கத்திற்கு எடுத்துரைத்து சிறந்தத் தீர்வை பெற்றுத் தந்துள்ளது என்றும் அச்சங்கங்களுக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

கடந்தாண்டு அந்நியத் தொழிலாளர் பிரச்சினையைக்  களைய இரண்டு முக்கியப் பணிகளை மேற்கண்டிருக்கிறோம் என்றார். கடந்த ஜூலை மாதம் மனிதவள  அமைச்சர் குலசேகரனை சந்தித்திருக்கிறோம். இரண்டாவதாக,  நவம்பர் மாதம் ஸ்ரீ ராம செல்வம் மற்றும் செல்வராஜ் ஆகியோர் மனித வள அமைச்சினால்  உருவாக்கப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர் முகாமைத்துவத்தின் சுதந்திரக் குழுவின் சட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தியிருக்கிறார்கள்  என்றார்.

மனிதவள  அமைச்சர் குலசேகரன் நம்முடைய கோரிக்கைக்குச் செவிசாய்த்து உடனடி நடவடிக்கை எடுத்தமைக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக டத்தோ ராமநாதன் தெரிவித்தார். நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் இந்த கொள்கை இந்திய வர்த்தகர்கள்  தங்களுடைய வர்த்தகத்தை வளப்படுத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.