புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > முன்னாள்  சட்டத் துறைத் தலைவருக்கு எதிரான போலீஸ் புகார்; விசாரணை நடத்தப்படும் -ஐ.ஜி.பி தகவல்
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

முன்னாள்  சட்டத் துறைத் தலைவருக்கு எதிரான போலீஸ் புகார்; விசாரணை நடத்தப்படும் -ஐ.ஜி.பி தகவல்

கோலாலம்பூர் ஜூன் 3

சட்டத்துறையின் முன்னாள் தலைவர் முகமட் எஃபெண்டி அலிக்கு எதிராக போலீஸ் புகார் செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திய போலீஸ் படை தலைவர் அப்துல் ஹமிட் பாடோர் அப்புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

 

அனைத்து போலீஸ் புகார் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என அவர் சொன்னார். எனினும் எந்த விதியின் கீழ் இந்த விசாரணை நடத்தப்படும் என்ற விவரத்தை அப்துல்  ஹமிட் வெளியிடவில்லை.

எஃபெண்டி அலிக்கு எதிராக ஜ.செ.க சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினரான லிம் லிப் எங் நேற்று டாங் வாங்கி மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் புகார் செய்திருப்பது குறித்து வினவப்பட்டபோது ஹமிட் பாடோர் இத்தகவலை வெளியிட்டார்.

முன்னாள் பிரதமர் காலத்தின் போது 1எம்டிபி ஊழல் விவகாரத்தை மூடிமறைத்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில்  எஃபெண்டிக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என லிம் தமது போலீஸ் புகாரில் கூறியிருந்தார்.

இதுகுறித்து போலீஸ் படை தலைவர் முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் லிம் கோரிக்கை விடுத்திருந்தார். நஜிப்பின் வங்கிக் கணக்குகளில்  கோடிக்கணக்கான வெள்ளி பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தும் சிறப்புப் பணிக் குழுவுக்கு சட்டத்துறையின் முன்னாள் தலைவர் அப்துல் கனி பட்டேல் தலைமையேற்றிருந்தார்.

2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கனி பட்டேலை நீக்கிவிட்டு சட்டத்துறையின் புதிய தலைவராக எஃபெண்டி அலியை நஜீப் நியமித்தார்.

சட்டத்துறையின் முன்னாள் தலைவர் விசாரிக்கப்பட வேண்டும் என ஜ.செ.க.வின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து அவர் மீது விசாரணை நடத்தவில்லையென எம்.ஏ.சி.சி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கூறியிருந்தது.

1எம்டிபி ஊழல் தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட நாடுகளின் அதிகாரிகள் விசாரணையை மேற்கொள்வதற்கான ஒத்துழைப்பை பெறும் முயற்சியை எஃபெண்டி தடுத்ததாக கூறப்படுவது உட்பட  அவர்மீது போலீஸ் விசாரணை நடத்தப்பட வேண்டுமென  லிம் கிட் சியாங் அறைகூவல் விடுத்திருந்தார்.

எஃபெண்டிக்கு எதிராக பயணத் தடையை உள்துறை அமைச்சு அகற்றியதைத் தொடர்ந்து இந்த கோரிக்கையை லிம் கிட் சியாங் விடுத்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன