திங்கட்கிழமை, ஜூன் 1, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > தாய்மொழி பள்ளிகளை அகற்றுவதா? -கெராக்கான் கண்டனம்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

தாய்மொழி பள்ளிகளை அகற்றுவதா? -கெராக்கான் கண்டனம்

கோலாலம்பூர், ஜூன் 4-

சீன சமூகம் மற்றும் மலாய் கல்வியாளர்களால் குறை கூறப்பட்டபோதிலும் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் ஆதரவோடு தேசிய மாதிரி பள்ளிகளை அகற்றிவிட்டு ஒரே பள்ளி முறையை அமல்படுத்த முனைந்துள்ள கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலேக்கின் செயலை கெராக்கான்  தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் ஹோ சாய் சாடினார்.

இனவாதி என்று குறைகூறப்பட்ட போதிலும், தமது கருத்துகளை ஊடகங்கள் திரித்து எழுதியதாக பழி சுமத்தும்  மஸ்லீ, தாய்மொழி பள்ளிகளை அகற்ற திட்டமிடுவது அவர் ஓர் உண்மையான இனவாதி என்பதை மெய்ப்பிப்பதாக டோமினிக்  லாவ்  கூறினார்.

மக்களின் கல்வியறிவின்மை, அறியாமை மற்றும் ஏழ்மையை அகற்றுவதற்கு சிறந்த வழி தாய்மொழி கல்வி என்று 1951ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அங்கீகரித்தது. இதுவே தேசிய மேம்பாட்டிற்கு வித்திடும் சிறந்த ஆற்றலாகும் என்றார் அவர்.

மாணவர்கள் தங்கள் ஆரம்பக் கல்வியை தாய்மொழி பள்ளியில் தொடங்க வேண்டும் என்று யுனெஸ்கோ பரிந்துரை செய்வதோடு அதே தாய்மொழி கல்வியைக் கொண்டு அடுத்த கட்டத்திற்கும் செல்ல வேண்டும் என்றும் அது வலியுறுத்துவதாக டோமினிக் லாவ்  தெரிவித்தார்.

அனைத்துலக அமைப்புகள் தாய்மொழி கல்விக்கு மிகப் பெரிய அங்கீகாரம் அளிக்கின்றன. இந்நிலையில் பல்வகை கல்வி முறையை அகற்ற மஸ்லீ முயல்வது ஏன் என்று தமக்குப் புரியவில்லை என்றார் அவர்.

தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த பொது மொழி என்பது முக்கிய அம்சமாக விளங்குகிறது. ஆயினும், தாய்மொழி பள்ளிகளில் மாணவர்களுக்கு தேசிய மொழி கற்பிக்கப்படுவது போதுமான அளவில் உள்ளது. அவர்களால் இதர இனத்தவர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. இந்நிலையில் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கே ஒரே பள்ளி முறையை அமல்படுத்துவதாகக்  கூறுவது ஏற்புடையதாக இல்லை என்றும் அவர் சொன்னார்.

சீன கல்வியை அழிக்கும் மஸ்லீயின் நோக்கத்தை அறிந்தும் கூட 42 ஜசெக உறுப்பினர்கள்  தொடர்ந்து மௌனம் காக்கப் போகின்றனரா என்று டோமினிக் லாவ் வினவினார். 1952ஆம் ஆண்டு கல்வி சட்டம், 1954ஆம் ஆண்டு கல்வி மீதான வெள்ளை அறிக்கை, 1956ஆம் ஆண்டு ரசாக் அறிக்கை மற்றும் 1960ஆம் ஆண்டு ரஹ்மான்  தாலீப் அறிக்கை ஆகிய கால கட்டங்களில் சீன கல்விக்கு நெருக்கடி ஏற்பட்டபோது  சீன கல்வியாளர்கள் போராடி வெற்றி பெற்றதை அவர் சுட்டிக் காட்டினார்.

கடந்த காலங்களில் தாய்மொழி பள்ளிகளுக்கு ஆதரவாக சீன கல்வியாளர்கள் கடும் போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்றுள்ள நிலையில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் இப்பள்ளிகள் அகற்றப்பட்டால் ஜசெக ஒரு துரோகி என்றும் சீன கல்விக்கு பாவம் இழைக்கின்றது  என்ற பழிக்கும் ஆளாகும் என்று டோமினிக் லாவ் எச்சரிக்கை விடுத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன