எம்ஏசிசி தலைவராக லத்திபா கோயா நியமனம்

0
6

கோலாலம்பூர், ஜூன்  4- 

மனித உரிமை வழக்கறிஞர் லத்திபா கோயா எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். டத்தோஸ்ரீ முகமட் சுக்ரி அப்துல் அவர்களுக்குப் பதில் லத்திபா கோயா நியமிக்கப்பட்டிருக்கிறார்.  Lawyers for liberty எனப்படும் சுதந்திரத்திற்கான வழக்கறிஞர் என்ற அமைப்பின் தலைவராகவும் லத்திபா கோயா இருந்து வருகிறார்.

ஜூன் 1 ஆம் தேதி முதல் லத்திபா கோயா இரண்டு ஆண்டுகளுக்கு  எம்ஏசிசி தலைவராக இருந்து வருவார் என பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. அரசாங்க அமைப்புகளை சீரமைப்பதற்கு  முன்னெடுக்கப்பட்ட மற்றொரு முயற்சியாக இந்த நியமனம் அமைவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக லத்திபா கோயாவின் நியமனத்திற்கு மாட்சிமை தங்கிய பேரரசர் ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தனது பதவிக் காலத்தின் போது சிறப்பாக செயல்பட்ட முகமட் சுக்ரிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் அலுவலகம் கூறியது.

2016ஆம் ஆண்டில்  சுக்ரி முன்கூட்டியே எம்ஏசிசியின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். எனினும் 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற்று அரசாங்கம் அமைத்ததைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி அவர் மீண்டும் எம்ஏசிசி தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

முதல் முறையாக முன்கூட்டியே பதவி விலகும் நிகழ்ச்சியில் உரையாற்றிய  முகமட் சுக்ரி, இதற்கு முந்திய தேசிய முன்னணி நிர்வாகத்தின் குறிப்பிட்ட சில தனிப்பட்ட நபர்கள் தம்மை நீக்கப் போவதாக மிரட்டியதாக கூறியிருந்தார். அதோடு கொலை மிரட்டலாக துப்பாக்கி தோட்டா ஒன்றையும் தாம் பெற்றதாக அவர் தெரிவித்திருந்தார்.

1எம்டிபி ஊழல்  விவகாரம் தொடர்பான விசாரணயில் பரவலான அனுபவத்தையும் தகவல்களையும் பெற்றிருந்த காரணத்தினால்  முகமட் சுக்ரியை எம்.ஏ.சி.சி.யின் தலைவராக மீண்டும் நியமிப்பதாக நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தவுடன் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் அறிவித்தார்.

இதனிடையே மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து லத்திபா கோயா பிகேஆர் உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.