புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 5 ஏக்கர் நிலம் வழங்குவீர்! – செனட்டர் சம்பந்தன்
சமூகம்முதன்மைச் செய்திகள்

செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 5 ஏக்கர் நிலம் வழங்குவீர்! – செனட்டர் சம்பந்தன்

காஜாங் ஜுன் 9-

மூன்று மாதத்திற்கு முன் நடைபெற்ற செமினி இடைத்தேர்தலின் போது வாக்குறுதி வழங்கப்பட்டதற்கு ஏற்ப செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 5 ஏக்கர் நிலத்தை வழங்குவதை மறு உறுதிப்படுத்தும்படி ஐ.பி.எ.ப்.  தலைவர் செனட்டர் டத்தோ சம்பந்தன் வலியுறுத்தினார்.

எனினும் வாக்குறுதி அளித்தபடி செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வாரியம் அல்லது நிர்வாகம் 5 ஏக்கர் நிலம் தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதம் எதனையும் பெறவில்லை என அவர் தெரிவித்தார். நேற்று திடீரென செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி இருக்கும் நிலத்திற்கு அருகே சுமார் 20 போலீஸ்காரர்கள் வந்தனர். நில மேம்பாட்டாளரரான சைம் டார்பி நிறுவனத்தின் ஆலோசனையின் பேரிலேயே அந்த போலீஸ்காரர்கள் அங்கு வந்ததாகவும் தெரிகிறது. அவர்களின் வரவு பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களிடையே பெரிய பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காகவே போலீசார் அங்கு வந்ததாக தெரிகிறது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற செமினி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது அமைச்சர் நீர், இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார், செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என கூறியிருந்தார்.

செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு வருகை புரிந்த கல்வித் துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் அவர்களும் பள்ளியின் நில விவகாரத்திற்கு சுமுகமான முறையில் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து புத்ராஜெயாவில் கல்வித்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங், சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ், சிலாங்கூர் மாநில அரசாங்க அதிகாரிகள், காஜாங் நகராண்மைக் கழக அதிகாரிகள், சைம் டார்பி நிறுவன அதிகாரிகள், செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வாரிய தலைவர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆகியோருக்கிடையே கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கணபதி ராவ் செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 5 ஏக்கர் நிலம் வழங்குவதற்கு மேம்பாட்டு நிறுவனம் இணக்கம் தெரிவித்ததாக கூறியிருந்தார். 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் தற்போது 450 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் திடல் பிரச்சினைக்கு சிலாங்கூர் மாநில அரசு உதவ வேண்டும் என்று ஏற்கனவே பெற்றோர் ஆசிரியர் சங்கம் உட்பட பல தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தற்போது இப்பள்ளிக்கு 3.8 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1.2 ஏக்கர் நிலத்தை சைம் டார்பி மேம்பாட்டு நிறுவனம் வழங்கினால் இப்பள்ளி மாணவர்கள் திடல் வசதியை பெறமுடியும். செமினி தேர்தல் முடிவுற்று மூன்று மாதங்கள் ஆகிவிட்ட போதிலும் இன்னமும் இந்த தமிழ்ப்பள்ளி பிரச்சனைக்கு கூடுதல் நிலம் கிடைப்பதில் இழுபறியாக இருப்பதாக பெற்றோர்கள் முறையிட்டனர்.

செமினி தோட்ட.தமிழ் பள்ளிக்கு இடைத்தேர்தலின் போது ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்படும் என சிலாங்கூர் அரசு உறுதியளித்துள்ளது.அதனை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென டத்தோ சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன