புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > தமிழ்ப்பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு  தலைமையாசிரியரின் விவேகமான அணுகுமுறை 
சமூகம்முதன்மைச் செய்திகள்

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு  தலைமையாசிரியரின் விவேகமான அணுகுமுறை 

ஜோர்ஜ் டவுன்,  ஜூன் 9-

சுங்கை ஆரா தேசிய மாதிரி தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே கல்வியில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கு அப்பள்ளியின் தலைமையாசிரியர் புதிய அணுகுமுறையை மேற்கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கற்றல் மற்றும் கற்பித்தல்  நடைமுறைகளில் மாணவர்களுக்கு ஆர்வமுள்ள விளையாட்டுக்கைள அறிமுகப்படுத்தும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரின்  முயற்சி மாணவர்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது.

அந்தப் பள்ளியின் தரையில் பரமபதம் மற்றும் நொண்டி விளையாட்டுக்கான படங்கள் வரைந்து  அதில் வர்ணங்கள் பூசப்பட்டுள்ளன .இந்த பள்ளி காலை மணி 7 .40 க்கு தொடங்கினாலும் மாணவர்கள் முன்கூட்டியே மணி 6.30க்கு வந்துவிடுவதாக சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ் சங்கா (வயது 57) கூறினார்.

பள்ளி நிர்வாகம்  கற்றல், கற்பிக்கும் அணுகுமுறையில் மகிழ்ச்சி கலந்த ஒரு சூழ்நிலையை உருவாக்கியபின்  கல்வியில்  மாணவர்களிடையே  ஆர்வம்  அதிகரித்திருப்பதாக அவர் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

மாணவர்கள் விளையாட்டுகளில் பங்கேற்காவிட்டால் படிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் குறிப்பிட்ட அறைக்கு சென்று அவர்கள் வாசிக்கலாம் அல்லது வகுப்பறைக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கும் வசதியைக் கொண்ட கம்ப்யூட்டர்களை பயன்படுத்த முடியும். பள்ளி விடுமுறை நாட்களிலும் இந்த கணினிகளை மாணவர்கள் பயன்படுத்த முடியும் .ஆனால் மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் வரவேண்டும் என சங்கா கூறினர். தாங்கள் ஏற்படுத்தியிருக்கும் இந்த புதிய அணுகுமுறைகள் கல்வியமைச்சின் கொள்கைக்கு எந்த வகையிலும் எதிரானது அல்ல என அவர் தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டு இந்த பள்ளிக்கு வந்தது முதல் மாணவர்களளின் கல்வி நடவடிக்கையில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக பல்வேறு புதிய அணுகுமுறைகளை தாம் அறிமுகப்படுத்தியதாக அவர் கூறினார். வகுப்பறைக்கு  வெளியிலும் மாணவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு பாடம் நடத்துவதற்கும் ஆசிரியர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இதனுடன் சுற்றுவட்டாரத்தை அறிந்து கொள்வதற்கும்  மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கின்றது.

வாரம்தோறும் வெள்ளிக்கிழமை  அருகேயுள்ள பகுதிகளுக்கு மாணவர்களை  நடந்தே செல்வதற்கு அழைத்துச் செல்கிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் குப்பைகளை அகற்றுவதற்காக சனிக்கிழமைகளில் நாங்கள் மாணவர்களை அழைத்துச் செல்கிறோம். எனினும் இதற்காக நாங்கள் அவர்களை வற்புறுத்துவதில்லை. நாங்கள் நடத்தும் நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்காவிட்டால் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கூட ஏமாற்றம் அடைகின்றனர்.

பள்ளிகளில் நாங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகள் குறித்து வாட்ஸ்அப் மூலம் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படும். இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதில் பங்கேற்பதற்கு தாங்கள் அனுமதி மறுத்தாலும் பிள்ளைகள் எங்களுக்கு தெரியாமல் வந்து விடுகிறார்கள் என பெற்றோர்களில் பலர் என்னிடம் கூறியுள்ளனர் என சிரித்துக்கொண்டே சங்கா தெரிவித்தார். தவிர சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மற்றும் அதனைப் பேணும் நடவடிக்கைகளையும் எங்களது பள்ளி கவனம் செலுத்தி வருகிறது.

மாணவர்களிடையே சுற்றுப்புற நலன்களை பேணுவது மற்றும் அவர்களிடையே  நேசத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஐ.நாவின் நீடித்த மேம்பாட்டுக்கான 17நோக்கங்களில் 9  இலக்குகள் நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும் சங்கா கூறினார். மாணவர்கள் நெகிழி பைகளை பயன்படுத்தக் கூடாது என அவர்களுக்கு கற்றுத் தந்திருப்பதோடு மறு சுழற்சிக்கான பொருட்களை சேகரிக்கும்  பெட்டியில் போடும்படி  அவர்களுக்கு  கற்று தந்துள்ளோம்.

நொறுக்குத் தீனிகளும் விரைவு  உணவுகளும்  பள்ளியில் அனுமதிக்கப்படுவதில்லை. மாணவர்கள் தங்களது வீட்டில் பெற்றோர்களுக்கும் இதுகுறித்து தெரிவிக்கும்படி அவர்களுக்கு கூறி இருக்கிறோம் என சங்கா  தெரிவித்தார்.

பள்ளிக்கு அருகில் உள்ள இடத்தில் தோட்டமும் போடப்பட்டுள்ளது அங்கு வாழை மரங்களும்  பூச்செடிகளும் நடப்பட்டுள்ளன. இந்த தோட்டத்தில் இருந்து ஒரு மாதத்திற்கு குறைந்த பட்சம் 600 வெள்ளிவரை வருமானம் கிடைக்கிறது. மாணவர்களிடையே தோட்டக்கலையில் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை ஊக்குவிக்கப்படுவதாக சங்கா கூறினார்.

இன்னும் மூன்று ஆண்டுகளில் ஓய்வு பெறவிருக்கும் சங்காவிடம் இந்தப் பள்ளியில் உங்களது எதிர்பார்ப்பு என்ன என்று வினவப்பட்டபோது  ஆசிரியர்களுக்கும் இந்த பள்ளியில் பயின்று வரும் 130 மாணவர்களுக்கும் பயனளிக்கக்கூடிய திட்டங்கள் தொடர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன