காஜாங், ஜூன் 11-

தொன்மைமிகு  கலைகளில் ஒன்றான  சிலம்பம் மலேசியா, இந்தியா போன்ற நாடுகளோடு நின்றுவிடாது உலக அரங்கிலும் இதன்  பெருமைகள் பறைசாற்றப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  கராத்தே ஒலிம்பிக் நிலையை எட்டிவிட்டது. இதே நிலையை சிலம்பமும்  அடைய வேண்டும். இதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்று மலேசிய இந்திய  உருமாற்று பிரிவின் (மித்ரா) சமூக நல மேம்பாட்டு துறை இயக்குநர் சுவர்மணி சுப்பன் தெரிவித்தார்.

இளைஞர்கள் நல்வழியில் செல்வதை ஊக்குவிக்கும் சிலம்பக் கலை சுய தற்காப்புக்கு மட்டுமின்றி பிறர் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் ஆக்கப்பூர்வ  பங்காற்றும்  என்று இங்கு இஸோரா காஜாங் பெர்டானாவில்  சிலாங்கூர் மாநில சிலம்பக் கோர்வை கழகத்தின் ஏற்பாட்டிலான சிலம்ப அரங்கேற்ற விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

“இந்நாட்டிலுள்ள சிலம்பக் கழகங்கள் தனித்தனியாகச் செயல்படுவதைக் காட்டிலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் பல நன்மைகளைப் பெறலாம். இவ்வாறு இயங்கும்  கழகங்களுக்கு உதவ அரசாங்கமும் தயாராக உள்ளது ” என்றார் அவர்.

இதனிடையே, சிலம்ப  ஆசிரியர் கே. அன்பரசன் மற்றும் அவரின் துணைவியாரான உதவி ஆசிரியர் டி. ஜோதி ஆகியோரிடம்  5 முதல் 6 ஆண்டு பயிற்சி பெற்ற 11 மாணவர்கள்  இந்த  அரங்கேற்ற விழாவில் பங்கேற்றனர். மிகவும்  நேர்த்தியான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில் மாணவர்கள் தனித் தனியாகவும் மற்ற மாணவர்களுடன் சேர்ந்தும் தங்களின்  சிலம்பக் கலையாற்றலை  வெளிப்படுத்தி அரங்கம் நிறைந்தோரின் பாராட்டைப் பெற்றனர்.

ஆர். குமார ராஜ், டி. மகாலெட்சுமி, டி. திவ்ய தர்ஷினி, டி. பார்தி குமார், டி. அருண் ராஜ், எஸ். கிஷோக் குமார், டி. விக்னேஸ்வரன், ஏ. தினேஷ், வி. சுதர்ஷன், டி. டினேஷ் பிரசாத் மற்றும் ஜி. ஹரி பிரசாத் ஆகியோரே தங்களின் சிலம்பத்  திறனை நிரூபித்த  அந்த மாணவர்கள்.

அரங்கேற்ற விழாவுக்கு முதல் நாளான சனிக்கிழமை செமினி, பண்டார் ரிஞ்சிங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற அரங்கேற்ற குரு பூஜையிலும் இம்மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்பூஜைக்குப் பின்னர் இவர்களுக்கு சிலம்ப சீருடைகள் மற்றும் கருப்பு நிற பட்டைகள் வழங்கப்பட்டன. மலேசிய  சிலம்பக் கோர்வைக் கழகத்தின் தோற்றுநரும் தலைவருமான அன்பழகன் சிறப்பு வருகை புரிந்த சிலம்ப அரங்கேற்ற விழாவில் பிரமுகர் சுவர்மணி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி சிறப்பித்தார்.