ஞாயிற்றுக்கிழமை, மே 31, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > பூப்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வுப் பெற்றார் டத்தோ லீ சொங் வேய் !
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

பூப்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வுப் பெற்றார் டத்தோ லீ சொங் வேய் !

புத்ராஜெயா, ஜூன்.13-

மலேசிய பூப்பந்து விளையாட்டுத்துறையில் அதிகமான விருதுகளை வென்று சாதனைப் படைத்த தேசிய பூப்பந்து வீரர் டத்தோ லீ சொங் வேய், தனது ஓய்வை வியாழக்கிழமை அறிவித்தார். புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சொங் வேய் கண்ணீருடன் தமது ஓய்வு பெறும் முடிவை அறிவித்துள்ளார். சொங் வேய்யின் இந்த அறிவிப்புடன் தமது 19 ஆண்டுக் கால பூப்பந்து விளையாட்டுக்கு அவர் விடைக் கொடுத்துள்ளார்.

தைவானில் இருக்கும் தமது மருத்துவர்களை ஆலோசித்தப் பின்னர் தாம் பூப்பந்து விளையாட்டில் இருந்து முழுமையாக ஓய்வுப் பெற முடிவு செய்துள்ளதாக லீ சொங் வேய் தெரிவித்தார்.  இது ஒரு கடினமான முடிவு என்றாலும் ஓய்வுப் பெறுவதைத் தவிர தமக்கு வேறு வழி இல்லை என அவர் சொன்னார்.

தம்முடைய உடல்நிலை குறித்து மருத்துவர்களுடன் கலந்தலோசித்தப் பின்னர் தம்மால் இனியும் கடுமையான பயிற்சிகளிலும் விளையாட்டுப் போட்டிகளிலும் ஈடுபட முடியாது என்பது உறுதியாகி இருப்பதாக லீ சொங் வேய் தெரிவித்தார். இவ்வேளையில் பூப்பந்து விளையாட்டுத்துறையில் தமது வளச்சிக்கு உதவி புரிந்த இளைஞர், விளையாட்டு அமைச்சு, தேசிய விளையாட்டுக் கழகம் , பயிற்றுனர்கள் டத்தோ மிஸ்பூன் சீடேக், டத்தோ தே சியூ போக்கிற்கு  நன்றி தெரிவித்துக் கொள்வதாக லீ சொங் வேய் தெரிவித்தார்.

லீ சொங் வேய்க்கு , மூக்கு புற்றுநோய் இருப்பது கடந்த ஆண்டில் ஜூலை மாதம் கண்டுப்பிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தைவானில் சிகிச்சைப் பெற்ற சொங் வேய், பூப்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வுப் பெற எண்ணம் கொண்டிருக்கவில்லை என நவம்பர் மாதம் அறிவித்தார்.

ஜனவரி மாதம் மீண்டும் பயிற்சியைத் தொடங்கிய சொங் வேய், மார்ச் மாதம் அகில இங்கிலாந்துப் போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இறுதிவரை அவர் எந்த போட்டியிலும் கலந்துக் கொள்ளவில்லை.  சொங் வேய், தமது இண்ஸ்டாகிராம் பதிவில் நோன்பு பெருநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும்போதே சூசமாக தமது ஓய்வை அறிவித்திருந்தார்.

2008 பெய்ஜிங் , 2012 லண்டன் , 2016 ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சொங் வேய், ஆடவர் ஒற்றயர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.   அதேவேளையில் 2011 லண்டன், 2013 குவாங்சாவ், 2015 ஜக்கார்த்தாவில் நடைபெற்ற உலக வெற்றியாளர் போட்டியிலும் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

மலேசிய பூப்பந்து அணியில் லீ சொங் வேய் ,  64 வெற்றியாளர் பட்டங்களை வென்றிருக்கிறார். இதில் 46 பட்டங்கள், சூப்பர் சீரிஸ் பூப்பந்துப் போட்டியில் வென்ற பட்டங்களாகும். 2008 ஆம் ஆண்டுத் தொடங்கி 2012 ஆம் ஆண்டு வரை , மொத்தம் 349 வாரங்கள் உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்தார். இதில் 199 வாரங்கள் தொடர்ச்சியாக உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் என்ற தகுதியுடன் வலம் வந்தார் என்பது குறிப்பிடதக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன