புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > அமைச்சருக்கு எதிரான விசாரணை: லத்தீஃபாவின் நடவடிக்கைக்கு  கெராக்கான் பாராட்டு
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

அமைச்சருக்கு எதிரான விசாரணை: லத்தீஃபாவின் நடவடிக்கைக்கு  கெராக்கான் பாராட்டு

கோலாலம்பூர், ஜூன் 13-

    ஓர் அமைச்சரைத் தொடர்புபடுத்திய ஊழல் குற்றச்சாட்டு மீது உடனடியாக விசாரணை செய்யும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) புதிய தலைவர் லத்தீஃபா கோயாவின் நடவடிக்கையை கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ்  ஹோ சாய் வெகுவாகப் பாராட்டினார்.

      இந்தப் புகார் மீது உடனடியாகவும் சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்க முனைந்துள்ள லத்தீஃபாவின் செயலானது எம்ஏசிசியை நியாயமாக வழிநடத்தும் அவரது ஆற்றலை வெளிப்படுத்துகிறது. ஊழலை எதிர்ப்பது கெராக்கானின் முதன்மை கோட்பாடு என்பதால் இந்நடவடிக்கை மீது கட்சி மனநிறைவு கொள்கிறது என்று  டோமினிக் லாவ் குறிப்பிட்டார்.

     “எம்ஏசிசியின் தலைவராக லத்தீஃபா கோயா நியமிக்கப்பட்டபோது பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வேளையில் அவர் செயலாற்றுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த ஒரே எதிர்க்கட்சி கெராக்கான் ஆகும்.  ஊழலைத் துடைத்தொழிப்பதில் தனது  நியாயமான மற்றும் நிபுணத்துவ ஆற்றலை லத்தீஃபா இப்போது  செயலில்  காட்டியுள்ளார் ” என்றார் அவர்.

  நடப்பு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் மீதான குற்றச்சாட்டை விசாரிப்பதோடு கெராக்கான் பரிந்துரைத்த பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள்  மீதான விசாரணை நடவடிக்கைகளையும் உடனடியாகத்  தொடங்க வேண்டும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

   மதீப்பிட்டிற்கு குறைவான விலையில் பங்களா ஒன்றை முன்னாள் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வாங்கியது மீதான குற்றச்சாட்டை சட்டத்துறை தலைவர் ரத்து செய்த போதிலும் இந்த  விவகாரம்  மீது மீண்டும் விசாரணையைத் தொடங்க வேண்டும்.

    பினாங்கு கடலடி சுரங்கப் பாதைத் திட்டம் மற்றும் இரண்டு ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு ஆடம்பர அடுக்குமாடி வீடுகள் வழங்கப்பட்ட விவகாரமும் உடனடி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றார். அதே வேளையில், முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத் தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்துவதோடு தமது 22 ஆண்டு கால ஆட்சியின் போது பிரதமர் மகாதீர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்.

      மேலும் சரவாக்கின் முன்னாள் முதலமைச்சரும் அம்மாநில நடப்பு  கவர்னருமான  துன் அப்துல் தாயிப் முகமது மீது சுமத்தப்பட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் மீதும் விசாரணைகளை முடுக்கிவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

  ஊழல் என்பதற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி என்ற பேதமில்லை. ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்தாலும் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தாலும், அவர்களை நீதிக்கு முன் நிறுத்தப்படுவது அவசியமாகும் என்று டோமினிக் லாவ் வலியுறுத்தினார்.

     மலேசியாவை ஒரு தூய்மையான, ஆக்கப்பூர்வமிக்க நாடாக உருவாக்குவதற்கும் மலேசியர்கள் ஒளிமயமான எதிர்காலத்தைக் கொண்டிருப்பதற்கும் இதுவே சிறந்த வழியாகும் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன