முகப்பு > அரசியல் > போலீஸ்காரர்களின் சமூக நலன் அம்சங்களை மறுஆய்வு செய்வீர் -டான்ஸ்ரீ  லீ லாம் தை 
அரசியல்முதன்மைச் செய்திகள்

போலீஸ்காரர்களின் சமூக நலன் அம்சங்களை மறுஆய்வு செய்வீர் -டான்ஸ்ரீ  லீ லாம் தை 

கோலாலம்பூர், ஜூன் 14

போலீஸ்கார்களுக்கான சமூக நலன் அம்சங்கள் குறித்து அவ்வப்போது அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என மலேசிய குற்றத்தடுப்பு  அறவாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

போலீஸ் சமூகத்தின் திறன் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் இந்த அம்சம் இருப்பதால் அவர்களது சமூக நலன் விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென மலேசிய குற்றத்  தடுப்பு அறவாரியத்தின் உதவித் தலைவர் டான்ஸ்ரீ  லீ லாம் தை கேட்டுக்கொண்டார்.

சம்பளம், அலவன்ஸ், பதவி உயர்வு மற்றும் அவர்களுக்கான வீடமைப்பு  வசதி உட்பட பல்வேறு அம்சங்களை சமுக நலன்கள் கொண்டிருப்பதால் இது குறித்து அவ்வப்போது ஆய்வு நடத்தப்பட வேண்டும் என  அவர்  கேட்டுக்கொண்டார்.

மேலும்  வாழ்க்கை செலவீனம்  தொடர்ந்து அதிகரித்து வருவதால் போலீஸ் படை  உறுப்பினர்களும் அதிகாரிகளும் மேலும் விவேகமாகவும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்றுவதற்கு அவர்களது சமூக நலன் அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென லீ வலியுறுத்தினார்.

போலீஸ்காரர்களுக்கான குவாட்டர்ஸ் அல்லது அவர்களுக்கான குடியிருப்பு வசதிகள் விவகாரத்தில் அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும். இப்போதைய சில போலீஸ் குடியிருப்புக்கள்  பொருத்தமான சூழ்நிலையில் இல்லை. அவற்றை பராமரிக்க வேண்டும் அல்லது சீரமைக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

அரச மலேசியா போலீஸ் படை உறுப்பினர்கள் சூதாட்டம் மற்றும் விபச்சார கும்பல்களுடனான தொடர்புகளை துண்டித்துக் கொள்ள வேண்டுமென போலீஸ் படை தலைவர் டான்ஸ்ரீ ஹமிட் பாடோர் வெளியிட்டிருக்கும் அறிக்கை குறித்து கருத்துரைத்த போது டான்ஸ்ரீ  லீ இதனை தெரிவித்தார்.

போலீஸ் படை உறுப்பினர்கள் எவரேனும் லஞ்ச கலாச்சாரத்தில் ஈடுபட்டால் அதனைச் சகித்துக் கொள்ள முடியாது  என டத்தோஸ்ரீ அப்துல்  ஹமிட் படோர் கூறியிருந்தார்.

போலீஸ் படையில் லஞ்சத்தை குறைப்பது மட்டுமின்றி முற்றாக லஞ்சம்  துடைத்தொழிக்கப்பட  வேண்டும் என்ற இலக்கை தாங்கள் கொண்டிருப்பதாகவும் அப்துல் ஹமிட் கூறியிருந்தார்.

லஞ்ச ஊழலை நிராகரிக்கும் போலீஸ்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வெகுமதி வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு நற்சான்றிதழும் வழங்கப்படும் என அவர் கூறியிருந்தார்.

இதனிடையே போலீஸ் படை உறுப்பினர்களுக்கிடையே லஞ்ச ஊழலை முறியடிப்பதை உறுதிப்படுத்துவதற்கு   ஹமிட் மேற்கொண்டு வரும் முயற்சிகளை  டான்ஸ்ரீ லீ லாம் தை வரவேற்றார்.

போலீஸ் படையின் ஒவ்வொரு உறுப்பினரும் மற்றும் அதிகாரிகளும் தங்களது கடமையை பொறுப்புணர்வோடும், கட்டொழுங்குடனும்,நேர்மையுடனும் நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதன் மூலம் போலீஸ் படை உறுப்பினர்கள் மீதான பொது மக்களின் நம்பகத்தன்மையும் மேலும் அதிகரிக்கும் என்று லீ  சுட்டிக்காட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன