அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > நவீனின் கொலை வழக்கு: மருத்துவ அறிக்கை இல்லாததால் ஒத்திவைப்பு!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

நவீனின் கொலை வழக்கு: மருத்துவ அறிக்கை இல்லாததால் ஒத்திவைப்பு!

ஜோர்ஜ்டவுன், ஆக. 21-
பகடிவதையால் இரண்டு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த டி.நவீனின் மரணம் மீதான வழக்கு விசாரணையில் தேவைப்படும் மருத்துவ அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியதை தொடர்ந்து இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் இவ்வழக்கை அடுத்த மாதம் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

அரசு தரப்பு துணை வழக்கறிஞர் ஃபாரா ஏய்மி ஜைனுல் அன்வார், தங்கள் தரப்பு இன்னும் டி.பிரவினின் (வயது 19) மருத்துவ அறிக்கையை பெறவில்லை என்பதால் தற்சமயம் இவ்வழக்கை தொடர முடியாது என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி இர்வான் சுவாய்பொன் இவ்வழக்கின் விசாரணையை செப்டம்பர் மாதம் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். ஜே.ராகேசுதன் (வயது 18), எஸ்.கோகுலன் (வயது 18) ஆகிய இருவரும் மேலும் இரண்டு பதின்ம வயதினருடன் சேர்ந்து பிரவினுக்கு அபாயகரமான ஆயுதங்களால் காயத்தை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

அந்நால்வரும் தற்போது சுங்கை பட்டாணியிலுள்ள சிறையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத்திற்கு அவர்கள் வந்து சேர வேண்டிய வாகனம் தாமதமானதால் அந்நால்வரும் இவ்வழக்கின் போது நீதிமன்றத்தில் இல்லை. அந்நால்வரும் பிரவினையும் நவீனையும் அடித்து காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரவினுக்கு இடது கன்னத்தின் எலும்பு முறிந்த நிலையில் மரணமடைந்த நவீனின் ஆசனவாயில் கடுமையான பொருளை அந்நால்வரும் நுழைத்ததால் அப்பகுதி கிழிந்தது. அதோடு, அவரது உடலில் தோள்பகுதியில் தீயிடப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நவீன் மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட அந்நால்வரும் இக்குற்றத்தை கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி ஜாலான் காக்கி புக்கிட் குளுகோரிலுள்ள கர்ப்பால் சிங் கல்வி மையத்தின் அருகாமையில் இரவு மணி 11.00 அளவில் புரிந்ததாக கூறப்படுகிறது. குற்றவியல் சட்டவிதி செக்க்ஷன் 326இன் கீழ் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அந்நால்வரும் மறுத்து விசாரணை கோரினர். அதோடு, அதே இடத்தில் நவீனுக்கு மரணம் விளைவித்ததாக குற்றவியல் சட்டவிதியான செக்க்ஷன் 302இன் கீழ் அந்நால்வர் மீதும் மற்றொரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர்களின் சார்பில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

பிரபல குற்றவியல் பிரிவு வழக்கறிஞரான ரஞ்சித் சிங் ராகேசுதன், கோகுலன் ஆகிய இருவரின் சார்பில் ஆஜரான வேளையில் ஒரு பதின்ம வயதினருக்கு வழக்கறிஞர் மன்வீர் சிங் ஆஜரானார். மற்றொரு பதின்ம வயதினருக்காக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. அவரது பெற்றோர் சட்ட ஆலோசனை சேவையின் உதவியை பெறும்படி நீதிமன்றம் வலியுறுத்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன