மரியாதைக்குரிய கதர் வேட்டிக்காரருக்கு வயது 100!!

0
7

கோலாலம்பூர், ஜூன் 16-

கதர் வேட்டியுடன் மலேசிய அமைச்சரவையில் வலம் வந்து வரலாற்றில் சிறப்பிடம் கொண்டிருக்கும் துன் வீ.தி.சம்பந்தனின் நூற்றாண்டு நிறைவு நாள் இன்று.

செல்வமிகுந்த குடும்பத்தில் பிறந்து,  தமிழகத்தில் தன் பட்டப் படிப்பை தொடர்ந்து,  பின்னர் அரசியலில் வீரநடை போட்டவர் துன் சம்பந்தன்.

நாட்டின் சுதந்திரத்திற்காக, மூத்த தலைவர்களின் துணையோடு, போராட்டம் நடத்தி இறுதியில் கூட்டாக சுதந்திரம் பெற்றுத் தந்து இந்தியர்களின் உரிமையில் பெருமை கண்டவர்.

மலேசிய இந்தியர்களின் வாழ்வாதார உரிமைக்காக அரசியல் ரீதியில் பெரும் நடவடிக்கைகளை ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்து மஇகாவின் அசைக்க முடியாத தலைவராக உருமாறினார். மலேசிய தமிழர்களை முழுமையாக ஒன்றிணைத்த பெருமையில், கோ.சாரங்கபாணியுடன், சம்பந்தனுக்கும் மிக முக்கிய இடம் உண்டு.

சுதந்திரத்துக்கு பிறகு, மலேசியத் தமிழர்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய பிரச்சனை, தோட்டத்துண்டாடல் ஆகும். பெரும்பாலான் தமிழர்கள், ரப்பர் தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருக்கும் பட்சத்தில், இந்தத் தோட்ட துண்டாடல்களினால், அவர்களது எதிர்காலம் பெரிய கேள்விக்குரியானது.

‘நாம் ஏழைகள் ஆனாலும்; கோழைகள் அல்ல!’ என்ற தாரக மந்திரத்தை முன் வைத்து, அந்த ஏழைத் தொழிளாலர்களிடம், கூட்டுறவு தத்துவத்தின் மூலம், சிறுகச் சிறுக பணம் சேர்த்து, பல தோட்டங்களை வாங்கி, தமிழர்களையும் தோட்டங்களுக்கு சொந்தக்காரர்களாக்கியவர் துன் சம்பந்தன்.

1973-ம் ஆண்டு ம.இ.காவிலிருந்து பதவி விலகிய துன் சம்பந்தன், மலேசிய அரசாங்கத்தின் மிக பெரிய பொறுப்பில் சில ஆண்டுகள் இருந்து, 1979-ம் ஆண்டு மரணமடைந்தார்.

கோலாலும்பூரில் உள்ள முக்கிய சாலை ஒன்றிற்கு அவரது பெயர் சூட்டப்பட்டு, அவரது பெயர் தினமும் உச்சரிக்கப்படுகிறது.

மலேசிய தமிழர்களின் மிக முக்கிய பெருந்தலைவர் துன் சம்பந்தனை நினைவு கூர்வதில் அநேகன் செய்தித் தளம் பெருமை கொள்கிறது.